Last Updated : 06 Dec, 2017 06:22 PM

 

Published : 06 Dec 2017 06:22 PM
Last Updated : 06 Dec 2017 06:22 PM

கிறிஸ்துவின் தானியங்கள்: இரக்கத்தையே நான் விரும்புகிறேன்

 

லகைப் படைத்த கடவுளாகிய யகோவா தனது பூமியில் அனைத்து படைப்புகளையும் உருவாக்க ஆறு தினங்கள் எடுத்துக்கொண்டார். ஏழாம் நாள், அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார் என விவிலியம் கூறுகிறது. அந்த நாளைப் புனித நாளாக யூதர்கள் பின்பற்றத் தொடங்கினர். ஆறுநாட்கள் உழைத்த அவர்கள் ஏழாம் நாளான ஓய்வுநாளில் எந்த வேலையிலும் ஈடுபடாமல் கடவுளை நினைவுகூர்ந்தனர். கிறிஸ்தவ சமய மரபில் ஞாயிறு வழிபாடு உருவானதன் அடிப்படை இதுதான். ஓய்வுநாளின் புனிதத்தை இயேசுவும் அவரது சீடர்களும் மீறியதாக பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள். இயேசு வெட்கித் தலைகுனியும்படியான விளக்கத்தை அவர்களுக்குப் பதிலாகத் தந்தார்.

பசியும் பலியும்

யூதேயாவில் அவர் நற்செய்தி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஓர் ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீடர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது. அதனால் வயல்களில் முற்றிய கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் மீது குற்றம் காண, இயேசுவையும் சீடர்களையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த பரிசேயர்கள் அதைப் பார்த்தனர். பதற்றம் அடைந்தவர்களைப்போல் இயேசுவின் அருகில் வந்து குரலை உயர்த்தி, “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உமது சீடர்கள் செய்கிறார்களே!? நீர் கண்டிக்க மாட்டீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “முன்னோராகிய தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் கடவுளுடைய வீட்டுக்குள் போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே..

அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார். ‘விலங்குகளின் ரத்த பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன் என்று பரலோகத் தந்தையாகிய அவர் கூறியிருப்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், குற்றமற்றவர்களை இப்படி கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.

ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்று கூறினார். இதைக் கேட்டு எதுவும் பேசமுடியாதவர்களாக பரிசேயர்கள் குமைந்தபடி அங்கிருந்து அகன்று அவரையும் அவரது சீடர்களையும் கண்காணித்தபடி இருந்தனர்.

ஓய்வு நாளில் அற்புதம்

பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு ஜெபக்கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கே சூம்பிய கையுடைய ஒருவன் இருந்தான். அவன் குணம்பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தவிப்புடன் இயேசுவை நெருங்கினான். அவனது தவிப்பை இயேசு உணர்ந்தார். அப்போது மக்கள் கூட்டத்துடன் கலந்திருந்த பரிசேயர்களில் சிலர், இயேசுவின் மேல் குற்றம் சுமத்த இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா? ”என்று அவர் குணமாக்கும் முன்பே கேட்டார்கள்.

அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா? அப்படியானால், ஆட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்புள்ளவன். அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார். பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவன் நீட்டியவுடன், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. பரிசேயர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு மனம் புழுங்கி வெளியேறினார்கள்.

இனியும் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று இயேசுக் கொலை செய்யச் சதித்திட்டம் போட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு இயேசு தன் சீடர்களுடன் கிளம்பிப் போனார். நோய்வாய்ப்பட்டிருந்த நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணமாக்கினார்.

மீண்டும் குற்றச்சாட்டு

இன்னொருமுறை பரிசேயர்கள் சிலரும் நியாயப் பிரமாணப் போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்திருந்த அவர்கள், இயேசுவிடம், “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீடர்கள் ஏன் பின்பற்றுவதில்லை; உணவு உண்பதற்கு முன் உமது சீடர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம் “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கும் நீங்கள், ஏன் தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:, ‘இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!’ ”. இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.

சொற்கள் உருவாக்கும் மாசு

அவர்கள் சென்றதும் இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவனது வாய்க்குள்ளே போகிற உணவு, அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார். பின்னர், சீடர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாகியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் நம் தந்தையால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். பார்வையற்றவர்கள் பார்வையற்றவர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு பார்வையற்றவன் மற்றொரு பார்வையற்றவனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார். அப்பொழுது பேதுரு, “வார்த்தைகள் குறித்து நீர் மக்களுக்குச் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்”என்று கேட்டார்.

அதற்கு இயேசு,“புரிந்துகொள்வதில் இன்னமுமா சிரமம்? ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு, அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலைவிட்டு வெளியேறுகிறது. ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல், துன்புறுத்துதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x