தொண்டரடிப் பொடியாழ்வார்: இச்சுவை அச்சுவை

தொண்டரடிப் பொடியாழ்வார்: இச்சுவை அச்சுவை
Updated on
2 min read

தொண்டரடிப் பொடியாழ்வார் அவதார நாள் டிசம்பர் 17

பச்சை மா மலை போல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச் சுவை தவிர யான் போய்

இந்திரலோகம் ஆளும்

அச் சுவை பெறினும் வேண்டேன்

அரங்க மா நகருளானே

- தொண்டரடிப் பொடியாழ்வார்

மார்கழி மாதம் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுவது. திருப்பாவையும், திருவெம்பாவையும் தெருக்கள் தோறும் முழங்கக்கூடிய மாதமிது. மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுவதும் மார்கழிதான். இம்மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் (டிசம்பர்.17) அவதரித்தவர் விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வார்.

சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். ஆழ்வார்களின் வரிசையில் பத்தாவதாக இடம்பெற்றவர். திருமாலின் வனமாலை அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கனுக்குப் பூமாலை சாற்றுவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர். பூமாலை மட்டுமன்றிப் பாமாலையாலும் அரங்கனைப் பூஜித்தவர்.

தெளிந்த நீரோடையாகச் சென்றுகொண்டிருந்த இவர்தம் பக்திப் பெருமித வாழ்வில் சோழ நாட்டுக் கணிகையான தேவதேவியின் இடையீடு ஏற்பட்டது. அனைத்தையும் அரங்கனின் வடிவமாகக் கண்ட விப்ரநாராயணன், தேவ தேவியின் மீதான காதலில் மெய்மறந்து செல்வங்களை இழந்தார். இவரைச் சோதிக்கக் கருதிய திருமால் சிறுவனின் வேடமிட்டுத் தன் கோயிலின் பொன்வட்டிலைத் தேவதேவியிடம் கொடுக்க பழி விப்ரநாராயணனின் மேல் விழுகிறது.

முடிவில் அரங்கனால் உலகத்துக்கு உண்மை அறிவிக்கப்பட்டு இறுதிவரை அரங்கனுக்காக தம்மை அடிமை பூண்டார். மேலும் அரங்கனின் அடியார்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் விப்ரநாராயணன். அன்றுமுதல் தொண்டரடிப் பொடியாழ்வாரானார்.

இவர் அரங்கனின் மீது பாடிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாசுரங்கள் முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. மாலை, பள்ளி எழுச்சி ஆகிய பிரபந்த இலக்கிய வகைமைகளுக்கு இவர்தம் பாடல்களை முன்னோடியாகக் கருதமுடியும். ஆழ்வார்கள் அனைவரும் தங்களுக்குத் திருமாலோடு ஏற்பட்ட அனுபவப் பதிவுகளையே பாசுரங்களாக உள்ளம் உருகப் பாடியுள்ளனர். இந்தப் பின்புலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாமாலை அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பெண்மயக்க இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியினைப் பாடியுள்ளார். அதன்மூலம் இருள்கடந்து ஒளிபெற்ற தம் நிலையையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமின்றி வடிவத்திலும் சிறப்புவாய்ந்தவையாக உள்ளன.

21chsrs_thondar

பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு

உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து

தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்

தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே (1:876)

தம் சுய அனுபவத்தையே இப்பாடலில் கூறியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துவரும் உணர்வுகளை வார்த்தைகளாக்கும் அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன. இது தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் தனிச்சிறப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in