Last Updated : 11 Dec, 2017 08:42 AM

 

Published : 11 Dec 2017 08:42 AM
Last Updated : 11 Dec 2017 08:42 AM

குருவே... யோகி ராமா.. 12: ‘தாய்மாமாவின் கேன்ஸர்.. காப்பாற்றிய பகவான்!’

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

மதுரையில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்தார். எப்போதாவது பேசுவார். நலம் விசாரிப்பார். இனிய நண்பர். நல்ல மனிதர்.

‘தஞ்சாவூர்ப் பக்கம் கோயிலுக்குப் போறோம். ஒரு ரூட் போட்டுக் கொடுங்களேன். என்னென்ன கோயில்களை ஒரே நாள்ல தரிசனம் பண்ணலாம்னு’ என்று கேட்பார். ‘நம்ம சோழவந்தானுக்குப் பக்கத்தில ஒரு கல்யாணம். அப்படியே திருவேடகம் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணினேன். அந்தக் கோயிலுக்கு எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வர்றாங்களாம். அப்படிப் பேசும்போது உங்களைப் பத்திச் சொன்னாங்க’ என்று சொல்வார்.

இப்போது எழுதிவரும் ‘குருவே... யோகி ராமா..!’ தொடரை இணையதளத்தில் படித்துவிட்டு எனக்கு போன் செய்தார். வழக்கத்தை விட அவர் பேச்சில் உற்சாகம் ததும்பியது.

‘‘திருவண்ணாமலை ஒரு பத்துப்பதினஞ்சு தடவையாவது போயிருப்பேன். ஆனா யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்துக்குப் போனதே இல்லை. ஒவ்வொரு தடவை கிரிவலம் போகும்போதும் போயிடணும் போயிடணும்னு மனசுல நினைச்சுக்குவேன். ஆனா போகவே முடியலை.

கூட வந்தவங்க அடுத்த முறை போகலாம்னு சொல்லுவாங்க. ஒருமுறை மழை வர்ற மாதிரி இருட்டிட்டு வந்துச்சு. இன்னொரு முறை மறந்தேபோயிட்டேன். ஆனா மூணு மாசத்துக்கு முன்னாடி திருவண்ணாமலை போயிருந்தப்ப, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்துக்குப் போனேன்.

என் தாய்மாமா பொன்னமராவதில இருக்கார். அவருக்கு உடம்பு சரியில்லேன்னு மதுரைல ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாங்க. நான்தான் கூடமாட ஒத்தாசையா இருந்தேன். என்னைத் தூக்கி வளர்த்தவர் என் மாமா. என்னென்னவோ டெஸ்ட்டெல்லாம் எடுத்துப் பாத்தாங்க. நாலஞ்சு தடவை வரச்சொன்னாங்க. கடைசியா... கேன்ஸர்னு சொல்லிட்டாங்க.

அடுத்தாப்ல, சென்னைல அடையார்ல இருக்கற கேன்ஸர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். எல்லா டெஸ்ட்டையும் பாத்தாங்க. அவங்களும் என்னென்னவோ டெஸ்ட்டெல்லாம் எடுத்தாங்க. கிட்டத்தட்ட கேன்ஸரை உறுதிப்படுத்தினாங்க. வயித்துல வந்திருக்கு. அடுத்த மாசம் வாங்கன்னு ஒரு தேதி சொன்னாங்க. கீமோ தெரஃபி பண்ணும்படியா இருக்கும்னு சொல்லியிருந்தாங்க.

அந்த சமயத்துலதான், திருவண்ணாமலை போனேன். கிரிவலம் போனேன். சட்டுன்னு யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் ஞாபகம் வந்துச்சு. என் மாமா நினைவுக்கு வந்தார். அவங்க வீட்டு பூஜை ரூம்ல, சின்னதா யோகி ராம்சுரத்குமார் படம் இருந்தது ஞாபகத்துக்கு வந்துச்சு. ‘என் நண்பர் வீட்டுக் கல்யாணப் பத்திரிகைல யோகி ராம்சுரத்குமார் போட்டோ இருந்துச்சு. அந்தப் படமும் அவர் கைதூக்கி ஆசீர்வாதம் பண்ற விதமும் அவரோட முகமும் மனசுக்கு ஏதோ நிம்மதியைத் தந்துச்சு. அப்பலேருந்து பத்திரிகையை பூஜை ரூம்ல வைச்சிட்டேன்.

அவரை எப்படிக் கும்பிடணும், என்ன மாதிரி நாமாவளியெல்லாம் சொல்லணும்னு எதுவும் தெரியாதுடா. ஆனா தினமும் பூஜைரூம்ல அவர் பேரைச் சொல்லி, அவர் படத்துக்கும் ஒரு பூவை வைச்சிருவேன். தீபம் காட்டிருவேன். விழுந்து நமஸ்காரம் பண்ணிக்குவேன். அந்த நண்பர் பூஜை ரூமைப் பாத்துட்டு, ‘உனக்கு ஒருகுறையும் வராதுப்பா’ன்னு அவர் சொல்ல... இன்னும் சந்தோஷமாயிட்டேன்’ன்னு மாமா சொன்னதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு.

கூட வந்தவங்ககிட்ட ‘ஆஸ்ரமம் போகலாம்’னு சொன்னேன். வழக்கம்போல அடுத்த தடவை போகலாமேன்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ ஒரு உந்துதல். ‘சரி... நான் போயிட்டு வந்துடுறேன். நீங்க போயிக்கிட்டே இருங்க’ன்னு சொல்லிட்டு, விறுவிறுன்னு ஆஸ்ரமம் பக்கமா நடையைப் போட்டேன். அப்புறம் என்ன நெனைச்சாங்களோ தெரியல... ‘இருப்பா... நாங்களும் வர்றோம்’னு அவங்களும் வந்தாங்க. எல்லாருமாப் போனோம்.

ஆஸ்ரம நுழைவாயில். வாசல்ல செருப்பைக் கழற்றிப் போட்டுட்டு கால் வைச்ச கையோட... ‘பகவானே... இதுவரை வரணும்வரணும்னு நெனைச்சு வராம இருந்துட்டேன். இப்ப வந்திருக்கேன். என் மாமாவுக்காக வந்திருக்கேன். அவரோட கேன்ஸர் வியாதிலேருந்து அவர் குணமாகணும்னு வந்திருக்கேன்’ ன்னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு, உள்ளே போனேன்.

அங்கே பிரமாண்டமான ஹால். அந்த நடுஹால்ல... அவரோட அழகான சிலை. எதிர்ல பகவான் யோகி ராம்சுரத்குமார் முக்தி அடைஞ்ச திருச்சமாதி. அந்தச் சந்நிதி.

அங்கே பஜன் மாதிரி நடந்துச்சு. எல்லாரும் சேர்ந்து பாடிட்டிருந்தாங்க. நான் என் மாமாவுக்காக வேண்டிக்கிட்டே இருந்தேன். ஒரு மந்திரமும் தெரியாது எனக்கு. ‘என் மாமா, கேன்ஸர்லேருந்து பொழைக்கணும், பொழைக்கணும்னு மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே இருந்தேன்.

அதுக்கு அப்புறம்... இருபது நாள் கழிச்சு, அடையார் ஆஸ்பத்திரிக்கு மாமாவை கூட்டிட்டுப் போனோம். திரும்பவும் டெஸ்ட்டெல்லாம் எடுத்தாங்க. மத்தியானத்துக்கு அப்புறம்தான்... கிட்டத்தட்ட சாயந்திரமாயிருச்சு டாக்டரைப் பாக்கறதுக்கு. அவர் டேபிள்ல எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்துருந்துச்சு.

எல்லாத்தையும் பாத்துட்டு, ‘கேன்ஸர்தான். ஆனா முத்தலை. அதனால கீமோ தெரஃபியெல்லாம் தேவைப்படாது. ரெகுலரா மாத்திரை சாப்பிடுங்க. ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வந்துட்டுப் போங்க. பயப்படவேணாம்’னு டாக்டர் சொன்னாரு. எல்லாருக்குமே அப்படியொரு சந்தோஷம்.

வெளியே வந்து, நிம்மதியா ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டோம். என் மாமா என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டார். ‘யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா’ன்னு சொல்லிட்டே இருந்தார்.

ஆஸ்ரமத்துல அப்போ நடந்த பூஜைல உக்கார்ந்து, என் மாமாவைப் பத்தியே, மாமா குணமாகணும்னு மட்டுமே வேண்டிக்கிட்டிருந்தேன் இல்லியா... பூஜை முடிஞ்சுச்சு. எல்லாரும் வரிசைல நின்னோம். ஒவ்வொருத்தரா நகர்ந்து, அங்கே சுவாமியோட சிலைக்கு, பகவான் யோகி ராம்சுரத்குமாரோட திருவுருவச் சிலைக்கு, பூ போட்டு நமஸ்காரம் பண்ணிக்கிட்டோம்.

அப்போதான்... அந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் நடந்துச்சு.

அன்னிக்கி பூஜையைப் பண்ணினவங்க பேரெல்லாம் சொல்லி அவங்க குடும்பம் நல்லாருக்கணும்னு வரிசையா சொல்லிட்டு வந்தாங்க. வெளியூர்ல இருக்கறவங்க வைச்ச கோரிக்கையையும் வேண்டுதலையும் சொல்லி பிரார்த்தனை பண்ணினாங்க.

பெங்களூர்லேருந்து அனுப்பிச்ச வேண்டுதலைச் சொன்னாங்க. பெங்களூரைச் சேர்ந்த வேலாயுதம் எனும் அன்பரின் கேன்ஸரின் நோய் குணமாகணும்னு சொன்னப்ப... ஒருமாதிரி ஆயிட்டேன்.

யாரோ ஒருத்தர் அவர். பெங்களூர்ல இருக்கார் அந்த வேலாயுதம். அவருக்கும் கேன்ஸர். எனக்கு அழுகேயே வந்துருச்சு. பகவான் யோகி ராம்சுரத்குமார் கருணை, என் மாமா மேல விழுந்துருச்சுன்னு முடிவு பண்ணிட்டேன். என் மாமா, குணமாயிருவார்னு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துருச்சு எனக்குள்ளே!

ஏன்னா... என் தாய்மாமா பேரும் வேலாயுதம்தான்!’’ என்று சொல்லிவிட்டு அந்த நண்பர்... குரல் உடைந்து, ஆனால் உற்சாகம் பொங்கச் சொன்னார்...

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

பகவான் யோகி ராம்சுரத்குமார் அப்படித்தான். அவரின் பேரருள் அவ்விதம்தான். இன்றைக்கும் தினம் தினம் அங்கே இதுபோல் எத்தனையோ சத்விஷயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் யோகி ராம்சுரத்குமார்.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x