திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் சுவாமி பச்சை சார்த்தி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி எழுந்தருளி வீதி உலா வந்து காட்சியளித்தார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி எழுந்தருளி வீதி உலா வந்து காட்சியளித்தார்
Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

காலை 5 மணிக்கு வெங்கு பாஷா மண்டபத்திலிருந்து சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சார்த்திய கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சார்த்தி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்மனுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பச்சை பட்டு சார்த்தி வழிபட்டனர். ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (13-ம் தேதி) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

அகத்திய பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
அகத்திய பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ஆவணி திருவிழா பச்சை சார்த்தியை முன்னிட்டு அங்குள்ள அகத்திய பெருமான் கோயிலில் அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பொதிகை திருச்சபை சார்பில் ஸ்ரீமங்களகுண கல்யாண விநாயகர் கோயில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in