

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், தேர்கள், நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் (400 ஆண்டுகள்), காஞ்சிபுரம் சாத்தனஞ்சேரி கரியமாணிக்க பெருமாள் கோயில் (300 ஆண்டுகள்), ராணிப்பேட்டை தக்கோலம் கங்காதீஸ்வரர் கோயில் (150 ஆண்டுகள்) என பல கோயில்களில் 100ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட 30-க்கும் மேற்பட்ட கோயில்களிலும், தருமபுர ஆதீனத்தை சேர்ந்த 27 கோயில்களில் 23 கோயில்களுக்கும், 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல, ரூ.1,120 கோடி மதிப்பீட்டில் 2,235 கோயில்களில் 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையின் 1,000-வது கும்பாபிஷேகமாக, சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் செப். 10-ம் தேதி நடைபெற உள்ளது.