

முக்காலமும் உணர்ந்தவர் என்று கூறப்பட்ட ஒரு ஞானியைச் சந்திக்க இரு நண்பர்கள் புறப்பட்டு கால்நடையாகச் சென்றனர். இரவு நேரம் வந்ததும், தாங்கள் கொண்டுவந்த போர்வையை விரித்துப் படுத்துறங்கினர். விடிந்தபின் அதை மடித்து எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
ஒரு மரத்த அவர்கள் தேடி வந்த ஞானி கண்களை மூடி அமர்ந்திருந்தார். அவர் கண்திறக்கும் வரை காத்திருந்தனர் நண்பர்கள்.
கண்விழித்த ஞானி அவர் களைப் பார்த்துப் புன்னகைத்து அவர்களை விசாரித்தார். பல விஷயங்களை அவருடன் பேசியபின், முதலாமவன், “ ஐயா, எங்களுக்கு ஒரு ஐயம் எழுந்துள்ளது. ஒருவன் பிறந்தது முதற்கொண்டு வளரும்போது, பகுத்தறிவைப் பயன்படுத்தி அனுபவம் வாயிலாக ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டே வருகிறான். இதில் அவனுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கையில் ஒருவன் நல்வாழ்க்கை வாழ கல்வியும் பெரியோரது வழிகாட்டுதலும் அவசியமா? அனுபவம் ஒன்றே போதாதா?” என்று கேட்டான்.
ஞானி அவர்கள் கையிலிருந்த போர்வைகளைப் பார்த்தார். அருகிலிருந்த கிணற்றைக் காட்டி, அங்கே ஒரு வாளியும், சவுக்காரத் தூளும் இருப்பதாக கூறி அவர்களின் போர்வைகளை ஊறவைத்து வரச் சொன்னார்.
இருவரும் ஒருவரை யொருவர் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு தங்கள் போர்வைகளை ஊறவைத்துவிட்டு வந்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்தப் போர்வைகளை நன்றாக அடித்து, துவைத்து, முறுக்கிப் பிழிந்து வரச் சொன்னார்.
இருவரும் அவ்வாறே செய்து திரும்பி வந்தனர்.
அதன் பிறகு துவைக்கப்பட்ட போர்வைகளில் ஒன்றை வெட்ட வெளியில் கொடி கட்டிக் காயப்போடுமாறும், மற்றொன்றை ஒரு அறையில் பூட்டிவைத்து விட்டு வரவும் ஆணையிட்டார் ஞானி.
மறுமொழி பேசாமல் நண்பர் கள் சொன்னதைச் செய்தனர்.
“மாலையில் என்னை வந்து பாருங்கள்” என்றார் ஞானி.
சாயங்காலம் நண்பர்கள் இருவரும் ஞானியைப் பார்க்க வந்தனர்.
இரண்டு போர்வைகளையும் எடுத்துவரச் சொன்னார் ஞானி.
கொடியில் போட்ட போர்வை நன்கு வெயிலில் காய்ந்து மொடமொடத்து உலர்ந்து வெயில் வாசனையோடு மணமாக இருந்தது. அதை மடித்து வைத்துக்கொண்டனர். மற்றொன்றை எடுத்துவர அறையை நெருங்கிக் கதவைத் திறந்தனர். குப்பென்று ஊறல் வாடை கலந்த முடைநாற்றம் அவர்கள் குடலைப் பிடுங்கியது.
ஞானியிடம் வந்தனர்.
“ஐயா, இந்தப் போர்வை அருமையாகக் காய்ந்துவிட்டது. மடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இன்னொரு போர்வையின் அருகில்கூட செல்ல முடியவில்லை.” என்றனர்.
“இரண்டையும் ஒன்றாகத்தானே துவைத்தீர்கள். ஒரே தண்ணீர், ஒரே சவுக்காரம். அப்படியிருக்கும்போது உலர்ந்ததில் மட்டும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார் ஞானி.
“ஐயா, இந்தப் போர்வைக்கு நல்ல வெயிலும், வெப்பமும், காற்றோட்டமும் கிடைத்தது. கெட்ட வாசனை போய்விட்டது. அந்தப் போர்வைக்கு அது கிட்டவில்லை ஐயா”.
“ஒருவனுக்குக் கல்வி என்பது அந்த வெயிலைப் போல. பெரியோர் வழிகாட்டல் என்பது அந்தக் காற்றோட்டமும் போல. இரண்டும் கிடைத்தால்தான் ஒருவனிடம் உள்ள துர்க்குணங்கள் விலகி நல்ல குடிமகனாகத் திகழ்வான்” என்றார் ஞானி.
கல்வி மற்றும் பெரியோரின் வழிகாட்டலின் அவசியத்தை இருவரும் உணர்ந்தனர்.