Last Updated : 06 Dec, 2017 09:40 AM

 

Published : 06 Dec 2017 09:40 AM
Last Updated : 06 Dec 2017 09:40 AM

குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

பயணங்கள், எப்போதுமே சுகமானவை. அதிலும் தேடலுடன் கூடிய பயணங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. எதற்காகப் பயணப்படுகிறோம். எதையெல்லாம் தேடுகிறோம்.

உலகாயத வாழ்க்கைக்கு காசுபணம்தான் தேவை. எல்லா சந்தோஷங்களையும் காசுபணத்துடன் முடிச்சுப் போட்டுவிட்டது இப்போதைய உலகம். எனவே சந்தோஷம் கிடைக்க வேண்டுமென்றால், காசுபணம் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கே பணம் அதிகமாகக் கிடைக்கிறதோ... எங்கே அதிக சம்பளம் கிடைக்கிறதோ... அங்கே ஓடிவிடுகிறோம். ‘இங்கே உப்பு அவ்வளவுதான்’ என்று முடிவு செய்துவிட்டு, அடுத்த நிறுவனம், வேறொரு இடத்தில் வேலை என்று தாவிவிடுகிறோம்.

சம்பாதிக்க வேண்டுமே என்று ஓடியது போய், இப்போது சம்பாதிப்பதை எப்படியெல்லாம் சேமிப்பது என்று அல்லாடுகிறோம். நகையாய் சேமிக்கிறோம். வைப்புத் தொகையாய் சேமிக்கிறோம். வேலையை, வியர்வையை, சம்பளமாக மாறியதை, பணமாக மாறி கையில் வந்திருப்பதை, மனையாக, பூமியாகச் சேமிக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.

‘தங்கத்துல போட்ட காசும் பூமில போட்ட காசும் என்னிக்கும் கைவிடாது’ என்று யாரோ எப்போதோ சொன்னதை, வேதவாக்காக எடுத்துக் கொண்டு, காசை நகையாகவும் காசை மனையாகவும் மாற்றிப் போடுகிற தேடல் நம்மிடையே இருக்கிறது.

‘பரவாயில்லப்பா உம் மகன். ஊரைநாட்டை விட்டு வேலைக்குப் போனான். கைநிறைய சம்பளம் வாங்கிட்டிருக்கான். கண்ணுக்கு லட்சணமா கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியும் வந்துட்டா. ரெண்டுபேரும் வேலைக்குப் போறாங்க. புருஷன் காசு லோனுக்கு, பொண்டாட்டி காசு வீட்டுச் செலவுக்குன்னு கணக்காப் பிரிச்சிக்கிட்டு, வீடுவாசல்னு வாங்கி செட்டிலாயிட்டான். சாமர்த்தியக்காரன்தான்‘ என்று யாரோ அப்பாவிடம் சொல்ல, அப்பாவும் அம்மாவும் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

பெற்றோரின் பெருமிதம்தான் தேடலா? காசும்பணமுமாகத் தேடி, நல்ல மனையாகத் தேடி, நல்ல வீடு கட்டுபவராகத் தேடி, நல்ல பொருட்களாகத் தேடி என அனைத்துத் தேடல்களும் பெற்றோரும் மற்றோரும்... ‘பரவாயில்லப்பா... சாமர்த்தியசாலிதான்’ என்று சொல்லும்போது, தேடல் குறித்த யோசனை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இங்கே, சாமர்த்தியசாலி எனும் பட்டம் கூட, ஒருவித தேடல்தான்!

‘கைநிறைய சம்பளம், கண்ணுக்கு லட்சணமா பொண்டாட்டி, அழகா அறிவா குழந்தைகள், சொந்தமா வீடு, போக வர காரு, பேங்க்ல எந்நேரமும் பேலன்ஸ் தொகை. ஞாயித்துக்கிழமையானா, கார் எடுத்துக்கிட்டு கோயில்குளம்னு ஒருவாரம், பார்க்பீச்னு இன்னொரு வாரம், சொந்த ஊருக்கு ஒரு வாரம், கேரளா, பெங்களூர்னு அடுத்த மாநிலங்களுக்கு ஒருவாரம். குறைவில்லாம இருக்காங்க’ என்று வாழ்க்கையை, வாழ்தலை, ‘ஸ்டேட்டஸ்’ எனும் ஆங்கிலச் சொல்லாகச் சொல்லி, உயர்ந்திருப்பதாகப் பாராட்டுகிறோம். அப்படியெனில், இந்த ஸ்டேட்டஸ்தான் தேடலா?

ஆனால், காசும்பணமும் வீடும்வாசலும் நகையும் பொருட்களும் எப்போது வேண்டுமானாலும் வரும்; போகும் என்பதை அறிவதே இல்லை. இவையெல்லாம் தேடுபவையெல்லாம் கிடைத்தும் ஒருநாள் நம்மளோடது இல்லை எனும் நிலை வரும் என்பதை உணருவதே இல்லை.

உள்ளிள் ஒளி இருப்பின், வாக்கில் ஒளி உண்டாகும் என்பார்கள். இங்கே, மின்தடையே கிடையாது. இன்வெர்ட்டர் அவசியமே இல்லை. உள்ளுக்குள் ஒளி ஏற்படவேண்டும் என்பதே முக்கியம். உள்ளே ஏற்படும் ஒளியே ஞானம். அதுவே தெளிவு. ஞானமும் தெளிவும் கிடைத்துவிட்டால், எல்லாம் கிடைத்துவிடும். இந்த ‘எல்லாம்’ என்பது வாழ்க்கைக்கானது. வாழ்தலுக்கானது. பிறவிக்கானது. இனி, பிறவியே இல்லாமல் இருப்பதற்கானது.

ராம்சுரத் குன்வருக்கு, இப்படியான தேடல்தான் இருந்தது. குருவியின் மரணம் கொடுத்த ஒளி, குருவைத் தேடச் செய்தது. அப்படித்தான், வாழ்க்கையில் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

நம் இந்தியாவில் மிக முக்கியமான க்ஷேத்திரம் காசி. காசிக்கு நிகரான புண்ய தேசமில்லை என்று போற்றப்படும் நகரம் காசியம்பதி. இந்தியா மட்டுமின்றி, உலகில் எங்கிருந்தெல்லாமோ, யார்யாரோ தினமும் காசியில் வந்து இறங்குகிறார்கள். கங்கை எனும் பிரமாண்ட நதி ஓடும் தலம் அது. கங்கையைப் போல் பிரமாண்டமாய், ஏராளமான சாதுக்கள் நிறைந்த ஊர். எல்லாவற்றுக்கும் மேலாக அண்டம் முழுவதும் ஆட்சி செய்யும் காசி விஸ்வநாதரும் அகிலத்துக்கே உணவிடும் அன்னபூரணியும் கோலோச்சுகிற அற்புதத் திருத்தலம்.

தன்னுடைய பதினாறாவது வயதில், பகவான் யோகி ராம்சுரத்குமா, காசி எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்றார். கையில் காசோ பணமோ எடுத்துக் கொள்ளவில்லை. யாரேனும் தரும் உணவைச் சாப்பிட்டார். தந்தால் சாப்பிட்டார். கிடைத்த இடத்தில் தூங்கினார். கிடைத்தால் தூங்கினார்.

வீடு சுகம் உதறினார். உறவுகள் சுகம். உதறினார். ஊரும் தெருவும் சுகம். உதறித்தள்ளினார். சுகம் எதுவோ, எவையோ அவற்றைத் தேடுகிற இந்த உலகில், சுகம் எதுவோ, சுகம் எவையோ... அவற்றையெல்லாம் விட்டு விலகி, காசியின் வாரணாசிக்குச் சென்றார். கங்கையில் குளித்தார். காசி முழுவதும் சுற்றினார். பித்துப்பிடித்தவர் போல் சுற்றினார். காணாமல் போட்டுவிட்ட பொருளைத் தேடுவது போல் சுற்றினார். மனதுக்கு நெருக்கமான நட்போ உறவோ... அதைத் தேடுவது போல் காசி நகரம் முழுவதும் சுற்றினார்.

அந்தக் குருவியின் மரணம் தந்த மாற்றங்கள் எதுவோ தேவை என்பதை அவருக்கு உணர்த்தின. இன்னும் ஏதோவொன்று கிடைத்தால்தான் சகலத்துக்கும் விடை கிடைக்கும் என்கிற வினா உள்ளே இருந்து கொண்டே இருந்தது. கனன்று கொண்டே இருந்தது. அதுதான் அவரின் இப்போதைய தேடல். அதைத் தேடியே இந்தப் பயணம்.

நிறைவாக, காசியம்பதியின் கதாநாயகன் காசிவிஸ்வநாதர் சந்நிதியில் நின்றார்.

அந்த மூலஸ்தானத்தில் இருந்து, கருவறையில் இருந்து வெளி ஒன்று உள்ளுக்குள் தெரிந்தது. அது வெட்டவெளி. பிரபஞ்சம் மொத்தமுமான ஏகாந்த வெளி. அப்படியொரு ஏகாந்த வெளியாக சிவபெருமானை, கடவுளை, கடவுளின் சூட்சும ரூபத்தைக் கண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

அது அற்புதத் தரிசனம். ஆனந்தப் பரவசம். வினோத அற்புதம். தேன் குடித்த மயக்கத்தில் ஆழ்ந்து போனார் ராம்சுரத்குன்வர் எனும் 16 வயது வாலிபன்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x