சொக்கப்பனை கோலாகலம்!
திருக்கார்த்திகை தீப விழாவின் முக்கியமான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் போற்றுகிறார்கள். அதை அக்னி வடிவம் என்பார்கள். அதுமட்டுமா? ருத்ர அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து, ஆலயத்தின் முன்னே உள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்துக்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.
மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோயிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
அடுத்து, சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவார்கள். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவமாகவே, சிவபெருமானாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கம் என்று போற்றுவார்கள்!
சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அதில் இருந்து வரும் சாம்பலை, அதாவது கரியை, தைலத்துடன் சேர்த்து ரட்சையாக காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயக்காடுகளிலும் பூமியிலும் தூவுவதும் நடைபெறும். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீடு, மனை விஷயத்தில் ஏதேனும் சிக்கலோ வழக்குகளோ இருந்தால் அவை சட்டப்படி தீர்ப்பு வெளியாகி, அந்தத் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வெளியாகும் என்பது ஐதீகம்!
சில தலங்களில் இரட்டை சொக்கப்பனைகளைக் கொளுத்தி வழிபடுவதும் உண்டு. திருமால் ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா தனிச்சிறப்புடன் நடைபெறுகிறது.
