Last Updated : 04 Dec, 2017 12:55 PM

 

Published : 04 Dec 2017 12:55 PM
Last Updated : 04 Dec 2017 12:55 PM

கடவுளின் தேசத்தை சிருஷ்டித்த பரசுராமருக்கு ஜயந்தித் திருநாள்!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் பூமி, கேரளம். அப்படி இந்த தேசத்தை அழைப்பதற்குக் காரணமாக இருந்தவர்... ஸ்ரீபரசுராமர். நாளைய தினம் 5.12.17 செவ்வாய்க் கிழமை அன்று பரசுராம ஜயந்தித் திருநாள். இந்த நாளில்... அவரை மனதாரத் தொழுவோம்!

ஜமதக்னி முனிவருக்கும் அவர் மனைவி ரேணுகா தேவிக்கும் ஐந்து குழந்தைகள். அவர்களில் கடைசி மகன் பரசுராமர். இவரே பரந்தாமனின் அம்சம் என்கிறது புராணம். அவர் சிவபெருமானிடம் தவமிருந்து கோடரியை வரமாகப் பெற்றார். பரசு என்றால் கோடரி என்று அர்த்தம்! இதனால் அவருக்கு பரசுராமர் எனும் பெயர் வந்ததாகச் சொல்கிறது புராணம்.

ரேணுகாதேவி, அதிகாலையில் எழுந்து, கங்கையில் நீராடி, நீரில் விரலால் வட்டம் வரைவாள். நீர்க் குடமொன்று மேலே வரும். அதைக் கொண்டு வந்து, கணவரின் பூஜைக்கு வழங்குவாள். இப்படி தினமும் செய்து வந்தாள். அவ்வளவு சாந்நித்தியம் மிக்கவள் அவள்.

ஒருநாள், நீரில் வட்டம் வரைய, அப்போது பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய முகமும் உடலும் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள். இதனால், நீர்க்குடம் வரவே இல்லை. மனதில் சின்ன சலனம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான் புத்தியில் உள்ள தெளிவும் ஞானமும் கூட மங்கிப் போய்விடும்.

தன் னுடைய தவ வலிமையால் நடந்தவற்றை அறிந்தார் ஜமதக்னி முனிவர். கடும் கோபம் கொண்டார். மகன்களை அழைத்து விவரம் சொன்னார். ’அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள்’ என்று கத்தினார். உத்தரவிட்டார்.

தந்தை சொன்னதைக் கேட்டு ,முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள். ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக, தன் கையில் இருந்த கோடரியால், அன்னை ரேணுகாதேவியை வெட்டினான்.

என்னதான் தந்தையும் குருவுமான ஜமதக்னி முனிவர் சொன்னதைச் செய்தாலும், அம்மாவையே இப்படி கொன்றுவிட்டோமே என செயலுக்குப் பிறகு கலங்கினான் பரசுராமன். கண்ணீர் விட்டுக் கதறினான். துடித்தான். துவண்டே போனான். தந்தையிடம் முறையிட்டான். மன்றாடினான்.

வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால் உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி. தாயின் தலையைக் கண்டெடுத்தான். ஆனால் உடலைக் காணோம். நடுங்கிப் போனான். இங்கும் அங்குமாகத் தேடினான். கிடைக்கவே இல்லை. வேறு வழியின்றி, அங்கே இருந்த வேறொரு உடலில் அம்மாவின் தலையைப் பொருத்தினான். அன்னை ரேணுகா உயிர் பெற்றாள்.

ரேணுகாதேவியானவள், இனி காளி மாரி எனும் திருநாமத்துடன் வாழ்வாள்; எல்லோருக்கும் அருள்பாலிப்பாள் என வாழ்த்தினார் ஜமதக்னி முனிவர். படவேடு முதலான தலங்களில் ரேணுகாதேவி எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் அன்னை.

இதையடுத்து, பரசுராமனும் சாப விமோசனம் பெற்றான்!

கேரளாவில் உள்ள பரசுராமர் பிரதிஷ்டை செய்த பதினெட்டு ஆலயங்களையும் மனதாரப் பிரார்த்திப்போம். பரசுராமருக்கே ஆன கேரளாவின் திருவல்லம் கோயிலைத் தொழுவோம். அவரின் பேரருளைப் பெறுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x