

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இதற்காக ஆக.12 முதல் 17-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபட வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இத்திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆக.12-ம் தேதி முதல் காலை 6 முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டதால் அதற்குப் பின் வந்தவர்கள் மலை ஏற முடியாமல் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசையில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று (ஆக.16) ஆடி அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் காலை 6, பகல் 12, மாலை 4, இரவு 7 மணி என நான்கு கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அடிவாரத்திலிருந்து சென்று, திரும்புவதற்கு வசதியாக கோயிலில் இருந்து அடிவாரம் வரை மின் விளக்குகள் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பாதையில் 3 இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் மருத்துவ உதவிக் குழுவினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.