

அ
னைத்து சிவாலயங்களிலும் கருவறையின் கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூத்தி, புளியறை என்னும் க்ஷேத்திரத்தில் சிவனுக்கும் நந்திக்கும் நடுவே எழுந்தருளியுள்ளார்.
சில நூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் சமண மதம் வேரூன்றியபோது, தில்லை நடராஜரை, ஐந்து பேர் சேர்ந்த குழு ஒன்று பாதுகாப்பாக எடுத்து வந்து புளிய மரப்பொந்து ஒன்றில் ஒளித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடம் அப்போதைய சேர நாடாக விளங்கிய பொதிகை மலைக்கு அருகேயுள்ள மூங்கில் வனமும் புளியந்தோப்பும் கலந்த இடமாகும். இறைவன் மறைத்து வைக்கப்பட்டிருந்த புளியந்தோப்பின் சொந்தக்காரர் ஒருநாள் தன் தோப்புக்கு வந்தபோது, நடராஜரைக் கண்டு தரிசித்தார். சிறிது காலம் தொடர்ந்து ரகசியமாகப் பூஜித்தும் வந்தார்.
குறுகிய காலத்திலேயே, தில்லையில் சமணம் நீங்கி, சைவம் எழுச்சியுற்றது. உடனே மறைத்துவைத்த இறைவனைத்தேடி ஒரு குழு தென்திசை வந்தது. அவர்களை நடராஜரே அசரீரி மூலம் தம் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று நடராஜரை எடுத்துக்கொண்டு திரும்பவும் தங்கள் தில்லைக்குக் கொண்டு சென்றது அக்குழு.
அதன்பின் வழக்கம்போல் தம் புளியந்தோப்புக்குச் சென்ற உரிமையாளர் நடராஜரைக் காணாது தவித்தார். அப்போது நடராஜர் மறைத்து வைக்கப்பட்டிருந்த புளிய மரத்தருகே பூமியிலிருந்து ஒரு சிறிய லிங்கம் தோன்றியது. தம் வருத்தத்தைப் போக்கிய ஈசனை சிந்தை குளிரத் தரிசித்தார்.
நடராஜரின் இந்தத் திருவிளையாடலை அறிந்த அச்சன்குன்றம் பகுதி சேர மன்னன் விரைந்து வந்து சுயம்புமூர்த்தியைத் தரிசித்துச் சென்றான். அன்றிரவு அரசன் கனவில் தோன்றிய ஈசனார், தமக்கு ஆலயம் அமைக்குமாறு ஆணையிட்டார்.
ஈசன் புளிய மரத்தருகே தோன்றியதால் புளிய மரம் தலவிருட்சம் ஆனது. புளிய மரப் பொந்தில் நடராஜர் ஒளித்து வைக்கப்பட்டதால் இந்த க்ஷேத்திரமும் புளியறை என்று அழைக்கப்படுகிறது.
வேத சாஸ்திரப்படி இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன்பு சடாமகுட தீர்த்தமும், நட்சத்திரங்களைக் குறிக்கும் 27 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் நந்தியிடையே ஒரே நேர்க்கோட்டில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தட்சிணாமூர்த்தியை இங்கு பக்தர்கள் வலம்வந்து வழிபட முடியும். இந்த தட்சிணாமூர்த்திக்குக் கட்டுப்பட்டு நவகிரகங்களும் இங்கிருப்பதாக ஐதீகம்.
இங்கு வந்து வழிபாடு செய்வோருக்கு கிரகதோஷங்கள் நீங்கி குருபலம் கூடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி ஆலயத்தில், திருமணக்கோலத்தில் உள்ளதால், இங்கு வழிபாடு செய்தால் தடைகள் அனைத்தும் நீங்கி, உடனே திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
திருநெல்வேலியில் இருந்து 67 கி.மீ. தொலைவில், செங்கோட்டைக்கு அருகே புளியறை உள்ளது.