

இன்றைக்கு இருக்கிற அத்தனை யோக, தியானங்களுக்கெல்லாம் அடிப்படையே பதஞ்சலி முனிவர் அருளியவைதான் என்று போற்றுகின்றனர் ஞானிகள். அப்பேர்ப்பட்ட ஞானமுனி பதஞ்சலிக்கு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ளது திருச்சமாதி. இங்கு வந்து பதஞ்சலி முனிவரை வணங்கினால், ஞானமும் யோகமும் தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள்.
அதாவது, பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசித்துவிட்டு, அதன் பிறகு நாம் பதஞ்சலி முனிவர் அதிஷ்டானத்தைத் தரிசிக்கவேண்டும். அந்தத் திருச்சுற்றுப் பகுதியில், எதிரிகள் தொல்லை ஒழியவும் கண்ணேறு களையவும் எடுக்கிற செயல்கள் அனைத்திலும் உடன் இருக்கவும் வீட்டில் தீய சக்தி அண்டாமல் பாதுகாக்கவும், இல்லத்திலும் உள்ளத்திலும் எப்போதும் ஒளி கொடுக்கவும் சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் காரணமாகத் திகழும் சப்தமாதர்களும் காட்சி தருகிறார்கள்.
திருச்சி, லால்குடி, அரியலூர், பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் முதலான அருகில் உள்ள பல ஊர்களில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் திருப்பட்டூருக்கு வந்து, பிரம்மாவைத் தரிசித்து, அருகில் உள்ள பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானத்துக்கு எதிரில் கண்கள் மூடி அமர்ந்து தியானம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்!
தெளிந்த சிந்தனையும் கல்விகலைகளில் குழந்தைகள் சிறந்து விளங்கவும் ஞானவான்களாகத் திகழவும் அருள்கிறார் பதஞ்சலி முனிவர். இன்றைக்கும் சூட்சும ரூபமாக, இந்தத் தலத்தில் மூலவராகக் குடிகொண்டு அருள்பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரருக்கு பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களைச் செய்ய, பதஞ்சலி முனிவரே வந்து பூஜித்து வணங்குகிறார் என்பதாக ஐதீகம் உண்டு என சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
யோக குருவாகத் திகழும் பதஞ்சலி முனிவரை வியாழக்கிழமைகளில் தரிசியுங்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!