காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் பால்குடம், காவடிகளை சுமந்து வந்த பக்தர்கள்: ஆடிக்கிருத்திகை கோலாகலம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர் . (உள்படம்) ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் . படங்கள்: ம.பிரபு
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர் . (உள்படம்) ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் . படங்கள்: ம.பிரபு
Updated on
1 min read

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி முருகன் கோயில்களுக்கு பால்குடம், காவடிகளை சுமந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். திருத்தணி முருகன் கோயிலில் 3 நாள் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது.

சென்னை வடபழனி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் காவடிகளை தோளில் சுமந்து கோயிலுக்கு வந்து ‘அரோகரா’ கோஷத்துடன் முருகனை மனமுருக வழிபட்டனர். பக்தர்கள் நெரிசல் இன்றி சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாலையில் அபிஷேகமும், புஷ்ப அங்கி அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து, இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி, பால்குடங்கள் சுமந்து வந்து முருகப்பெருமானின் அபிஷேகத்துக்கு அளித்தனர். இந்த விழாவையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

இதேபோல் காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விநாயகர் கோயில் வளாகத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள நடுபழனி எனப்படும் மரகத பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகையையொட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் சுமந்து சென்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து முருகப்பெருமானை வழிப்பட்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் 3 நாள் தெப்பத் திருவிழா தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளை சுமந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருகழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோயில், கந்தக்கோட்டம், திருப்போரூர், பெசன்ட்நகர், வல்லக்கோட்டை, குன்றத்தூர், சிறுவாபுரி உட்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து முருகனை வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in