

முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக, வருடந்தோறும் அவர்கள் இறந்த திதியில், திவசம் எனும் சடங்குகள் செய்து, முன்னோரை வணங்குவோம். இன்னும் சிலர், மாதந்தோறும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வார்கள்.
ஆனால் வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று தெரிவிக்கிறார் சென்னை காளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர்.
எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய... அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும் என்கிறார். நம் சந்ததியினருக்கு வங்கி டெபாசிட் போல், நாம் சேர்த்து வைக்கும் சொத்துகள் இவைதான் என தர்ப்பண காரியங்கள் குறித்து வலியுறுத்துகிறார்.
மாதந்தோறும் அமாவாசை நாளிலும் தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். ஐப்பசி முடிந்து கார்த்திகை துவங்கிறது. வரும் 17.11.17 அன்று தேதிப்படி மாதப் பிறப்பு என்றாலும் முதல்நாளே துவங்கிவிடுவதால், தர்ப்பணத்தை 16-ம் தேதி அன்று செய்வதே உத்தமம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
அதேபோல், 18-ம் தேதி சனிக்கிழமை அமாவாசை. எனவே அமாவாசை நாளிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். அதாவது மாதப் பிறப்புக்காக வியாழக்கிழமையும் (16-ம் தேதி) அமாவாசைக்காக சனிக்கிழமையும் (18-ம் தேதி) முன்னோர்களை ஆராதிக்கும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் பூரணமாக உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!