

தூத்துக்குடி: தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனியால் தூத்துக்குடி மாநகரம் நேற்று பக்தர்கள் வெள்ளத்தால் குலுங்கியது. செப்டம்பர் 8-ம் தேதி வரை தேரினை கண்டுகளிக்கலாம்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி நேற்று நடைபெற்றது. கொட்டகைக்குள் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் தங்கத் தேர் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காலை 8.10 மணிக்கு தங்கத் தேர் பவனி தொடங்கியது.
மெல்ல, மெல்ல அசைந்து வந்த தேர், நகர வீதிகளில் 4 மணி நேரம் பவனி வந்து பகல் 12 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. தேர் பவனியில் பங்கேற்ற பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், மோர், பால், பழம் மற்றும் குளிர் பானங்களை பலரும் வழங்கினர். தேர் குறுகலான வீதிகளில் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. எனினும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீட்டு மொட்டை மாடிகள், பால்கனிகளில் இருந்து மக்கள் மலர்களைத் தூவினர். நகரின் அனைத்து சாலைகளிலும் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜிசி சாலையில் பழைய மாநகராட்சி வரையும், விஇ சாலையில் தீயணைப்பு நிலைய சந்திப்பு வரையும், ஜார்ஜ் சாலையில் விளையாட்டு மைதான சந்திப்பு வரையும், தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடித் துறைமுகம் வரையும், வடக்கு கடற்கரை சாலையில் மதுரா கோட்ஸ் மில் வரையும் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பல்வேறு இடங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாதா கோயில் பகுதி வரை நகர பேருந்து இயக்கப்பட்டன. பனிமய அன்னையின் தங்கத் தேர் பேராலய வளாகத்தில் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதுவரை பொதுமக்கள் தேரினை கண்டு களிக்கலாம்.