சமநோக்கை வலியுறுத்தும் மனீஷா பஞ்சகம்

சமநோக்கை வலியுறுத்தும் மனீஷா பஞ்சகம்
Updated on
2 min read

ஆதி சங்கரர் அருளிய பல்வேறு படைப்புகளில் “மனீஷா பஞ்சகம்” முக்கியமான ஒன்றாகும். சாதி அபிமானத் தியாகம் (சாதி துவேஷம் இல்லாமல் இருப்பது) என்ற பண்பு அனைவரும் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று என்பதை உணர்த்தும் படைப்பாகும். “பஞ்சகம்” என்றால் ஐந்து பொருட்களின் சேர்க்கை என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் மனீஷா என்றால் நிச்சயமான அறிவு(ஞானம்) என்று பொருள். நம்பிக்கையினாலோ, கொள்கையினாலோ அல்லாமல், ஒரு உயர்ந்த அறிவுக்கருவியின் மூலம் ஐயமின்றி ஏற்படும் உறுதியான அறிவே “மனீஷா” எனப்படும். இந்த நிச்சய அறிவை விளக்கும் ஐந்து ஸ்லோகங்களே “மனீஷா பஞ்சகம்” எனப்படுகின்றன.

இந்த மனீஷா பஞ்சகம் உருவாவதற்கு வழிவகுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்தச் சம்பவமே சாதி அபிமானத் தியாகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வல்லது.

ஒரு நாள் சங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டு தன் சீடர்களுடன் குறுகிய பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் புலையன் ஒருவன் நாய்களோடு வந்துகொண்டிருந்தான். சங்கரரின் சீடர்கள், புலையனை ஒதுங்கி வழிவிடச் சொன்னார்கள். சங்கரரும் அப்புலையனைப் பார்த்து “விலகிப் போ விலகிப் போ” என்றார். அதைக் கேட்ட புலையன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டான்:

“துறவிகளில் மேலானவரே! தாங்கள் விலகிப்போ என்று கூறியது இந்த உடலையா? அப்படியென்றால், என்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம்; தங்களுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம்; ஒரு ஜடத்திலிருந்து இன்னொரு ஜடம் எப்படி விலகும்? அல்லது தாங்கள் விலகிப் போ என்று கூறியது இந்த உடலுக்குள் இருக்கும் சைதன்யத்தையா? சைதன்யமான ஆத்மா எனக்குள்ளும், உங்களுக்குள்ளும், எங்கும் பரவியுள்ளதே; அது எப்படி விலகிப் போக முடியும்? எனவே தாங்கள் விலகிப் போ என்று எதைக் கூறினீர்கள்? கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது, சாக்கடையிலும் விழுகிறது, இதனால் கதிரவனுக்கு இழுக்கு ஏற்படுவது இல்லையே? மேலும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயம் மண் பானைக்குள் இருந்தாலும் சரி, பொன் பானைக்குள் இருந்தாலும் சரி, ஆகாயம் வேறுபடுவதில்லையே? இந்த அறிவை தாங்கள் அறிந்திருக்கக்கூடுமே; அப்படி இருந்தும் ஏன் உங்களையும் என்னையும் பேதப்படுத்தி விலகிப் போ என்று கூறினீர்கள்?”

மேற்கூறிய கேள்விகளைக் கேட்டவுடன், சங்கரர் எவ்விதச் செருக்கும் இல்லாமல், அந்நொடியிலேயே அப்புலையனிடம் பணிந்து “அத்வைத அறிவில் நிலைத்து நிற்கும் தாங்களே என் குரு” என்று வணங்கி “மனீஷா பஞ்சகம்” எனும் படைப்பை அருளினார்.உபநிஷத்துக்களில் முதன்மையாக விளக்கப்படும் அத்வைத அறிவை, இந்த ஐந்து சுலோகங்கள் மூலமாகப் பல்வேறு வழிகளில் சாரமாக விளக்கியுள்ளார். முதல் இரண்டு சுலோகங்களில், ஜீவ பிரம்ம ஐக்கியம் பற்றி விளக்கியுள்ளார். மூன்றாவது சுலோகத்தில் அத்வைத அறிவை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிகளையும், அதனால் கிடக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார். நான்காவது சுலோகத்தில் ஆத்மா அறிவு சொரூபமானது என்றும், அதை ஏன் புற அறிவினால் அறிய முடியாது என்றும் விளக்கியுள்ளார். ஐந்தாவது சுலோகத்தில் அத்வைத அறிவின் பலன் ஆத்மாவை ஆனந்தம் என அறிவதே என்று விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு சுலோகத்திலும் தன்னுடைய நிச்சயித்த அறிவை நிலைநாட்டியுள்ளார்: “அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும், உலகத்திற்கே சாட்சியாக இருக்கும் பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைத அறிவை எவர் ஒருவர் அடைந்து, அந்த அறிவிலேயே நிலைத்து நிற்கிறாரோ, அவர் புலையனாக இருந்தாலும் சரி, வேதம் ஓதும் அந்தணராக இருந்தாலும் சரி, அவரே எனது குரு”.

சாதி வேற்றுமை இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக சம நோக்கு என்ற பண்பை நாம் அனைவரும் வளர்த்து கொள்ள ஆதி சங்கரரின் மனீஷா பஞ்சகம் ஒரு எடுத்துக்காட்டு என்பது தெளிவாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in