கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அழகர்கோவில் கள்ளழகர்கோயில் ஆடிப்பெருந்திருவிழா ஜூலை 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பச் சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார்.

முக்கிய விழாவான ஆடித் தேரோட்டம் பவுர்ணமியான நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

காலை 8.10 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி, கோயில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி மற்றும் பக்தர்கள் வடம்பிடிக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் புடைசூழ தேர் வந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை கோயில் வளாகத்திலுள்ள 18-ம் படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை,தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி மதுரை எஸ்பி சிவபிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று (ஆ.2) சப்தவர்ணம், புஷ்பச் சப்பரம், நடைபெறும். நாளை (ஆக.3) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in