

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
'மலையே மகேசன்' என போற்றப்படும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஆடி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவு பெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
காலை 10 மணி வரை பக்தர்களின் கிரிவலம் தொடர்ந்து. பின்னர், சுட்டெரித்த வெயில் காரணமாக, பக்தர்களின் கிரிவலம் சற்று குறைந்திருந்தது. பின்னர், மாலை 4 மணிக்கு பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. ஓம் நமசிவாய என உச்சரித்தபடி பக்தர்கள் பலரும் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் கிரிவலம் விடிய, விடிய நடைபெற்றது.
தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பவுர்ணமிக்கு வந்திருந்த பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டன.
அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே உள்ள வீதி மற்றும் இரட்டை பிள்ளையார் கோயில் வீடு, வட ஒத்தவாடை வீதியில் காவல்துறையினர் வழக்கம் போல் தடுப்புகளை அமைத்தனர். இதனால், சின்னக்கடை வீதி வழியாக கிரிவலம் வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவதிப்பட்டனர். காவல்துறையின் செயலுக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.