

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் கி.பி. 9-ம் நூற்றாண் டில் கட்டப்பட்ட குடவரை கோயிலை, பழமை மாறாமல் பாதுகாக்க தொல்லியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
செவல்பட்டிக்கு மேற்கே தனித்து நிற்கும் குன்று அருணகிரிமலை என்று அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு வடக்கே வைப்பாறு ஓடுகிறது. இவ்வூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆதிகுடிகள் வாழ்ந்து வந்ததாக தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். இக்குன்றில் மேல் வடபுறம் நடுப்பகுதியில் சுமார் 200 அடி உயரத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடவரைக் கோயில் உள்ளது.
இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறியதாவது: குடவரைக் கோயில் வடக்கு பார்த்த நிலையில் உள்ளது. மண்டபத்துடன் கூடிய சிறிய கருவறை கிழக்கு பார்த்து உள்ளது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். கருவறையின் உள்ளே எந்த உருவமும் இல்லை. தூணின் ஒவ்வொரு சதுரப் பகுதியிலும் வட்டமான வளையத்தினுள் முற்கால பாண்டியரின் சிற்பக்கலையின் நுண்ணிய வேலைப்பாட்டைக் காண முடிகிறது.
இம்மண்டபத்தின் உட்புற தெற்குச் சுவரின் நடுவே திருமால் உருவமும் அதனை அடுத்து மேல்புறம் விநாயகர் உருவமும் கிழக்குச் சுவரில் ஆடவல்லானின் (நடராஜரின்) அழகிய உருவமும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. குடவரையின் அமைப்பை கருத்தில்கொண்டு இது கி.பி.9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சார்ந்தது எனலாம். இக்கோயிலை பழமை மாறாமல் தொல்லியல் துறை கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.