

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை (ஆகஸ்ட் 1-ம் தேதி) பவுர்ணமி கிரிவலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையே மகேசன் என போற்றப்படும் திருவண்ணாமலையில் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர்.
இதையொட்டி, ஆடி மாத பவுர்ணமி, நாளை (ஆகஸ்ட் 1-ம் தேதி) அதிகாலை 3.26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2-ம் தேதி) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது. மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பேருந்துகளும், தென்னக ரயில்வே சார்பில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி நாளில், அண்ணாமலையார் கோயிலில் 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.