என் தங்கையை கல்யாணம் பண்ணிக்கோ..!’நெல்லையப்பரை அழைத்த கோவிந்தர்!

என் தங்கையை கல்யாணம் பண்ணிக்கோ..!’நெல்லையப்பரை அழைத்த கோவிந்தர்!
Updated on
1 min read

நெல்லைச் சீமையின் சிகரமென, மகுடமெனத் திகழும் நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாள் தினமும் காலையும் மாலையும் திருவீதியுலா வரும் கண்கொள்ளாக் காட்சி அரங்கேறி வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான, காந்திமதிக்குத் திருக்கல்யாணம், நாளை செவ்வாய்க்கிழமை 14.11.17 அன்று அதிகாலையில் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

முன்னதாக, ’பரமேஸ்வரனைத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று உமையவளான காந்திமதி அன்னை, சிவனாரை நோக்கி தபஸ் செய்யும் சம்பவம் இன்று காலையில் நடைபெற்றது. தவக்கோலத்தில் காந்திமதியின் உத்ஸவ மூர்த்தியைத் தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அதேவேளையில், நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா வந்தார். ஒருபக்கம் தன் தங்கை, சிவபெருமானைத் திருமணம் செய்யவேண்டி தவம் இருப்பதையும் இன்னொரு பக்கம் சிவபெருமான், ரிஷப வாகனத்தில் வருவதையும் அறிந்த நெல்லை கோவிந்தராஜ பெருமாள், ஓடோடிச் சென்று நெல்லையப்பரைச் சந்திப்பார். 'ஈசனே... என் தங்கை உங்களைத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேன்னு உறுதியா இருக்கா. உங்களையே நினைச்சி, கடும் தவம் பண்ணிட்டிருக்கா. நீங்கதான் மனசு இரங்கணும். என் அன்புத் தங்கச்சியை நீங்க ஏத்துக்கணும்; கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று சொல்லி, கோவிந்தராஜ பெருமாள்... நெல்லையப்பரை காட்சி மண்டபம் நோக்கி வரவேற்று அழைத்துச் செல்வார்.

பாசமும் நேசமும் பிரியமும் அன்பும் நிறைந்த இந்தக் காட்சி, இன்று 13.11.17, மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதையடுத்து காட்சி மண்டபத்தில், காந்திமதிக்கு சிவனார் திருக்காட்சி தந்தருள்வார். பார்க்கவே மெய்ம்மறக்கும்படியான காட்சி இது!

தங்கையின் விருப்பத்தையும் தான் அதற்குச் சம்மதம் என்பதையும் சிவனாரிடம் தெரிவிக்கும் நெல்லை கோவிந்தர், கல்யாணத்துக்கே ரெடியாகி விடுகிறாராம். அதாவது, தங்கையை தாரை வார்த்துக் கொடுப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறாராம். அதனால்தான் தன் திருக்கரத்தில் கிண்டியுடன் (தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரம்) திருக்காட்சி தந்தார் பெருமாள்.

இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண நூற்றுக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ‘நெல்லையப்பா... நெல்லையப்பா...’ எனக் கோஷமிட்டு வணங்கினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதிக்குத் திருக்கல்யாணம் நாளை 14.11.17 அதிகாலையில் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பூஜைகளை சிவாச்சார்யர்களும் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in