Last Updated : 28 Nov, 2017 01:21 PM

 

Published : 28 Nov 2017 01:21 PM
Last Updated : 28 Nov 2017 01:21 PM

திருவிடந்தை வந்தால்... கல்யாண மாலை நிச்சயம்!

உரிய வயது வந்தும்... மகளுக்கோ மகனுக்கோ இன்னும் கல்யாணம் ஆகலையே... என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் பெருங்கவலை. கவலையே வேண்டாம்... திருவிடந்தை திருத்தலத்துக்கு வந்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்ய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று. இது திருமணப் பரிகார திருத்தலமாகவும் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில்.

அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக ஆட்சி செய்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என்கிறது தலபுராணம் .

இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தி என மணம் புரிந்து அருளி ஆட்கொண்டாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி, தன் இடப்பக்கத் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம்.

தினம் ஒரு கல்யாணம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்திய கல்யாணப் பெருமாள் என்று திருநாமம் அமைந்தது. அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு ஸ்ரீஅகிலவல்லி நாச்சியார் என்று திருப்பெயர்.

கோயிலில் தனிச் சந்நிதியில், கோமளவல்லித் தாயார் என்ற திருப்பெயருடன் அருள்புரிகிறார். ‘திரு’ வை அதாவது லட்சுமியை தன் இடபாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி திருவிடந்தை என்றானது என்கிறார்கள்.

இங்குள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்..

இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியைத் தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இந்தப் பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்ஸவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும். இல்லத்தில் சுபிட்சமுடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x