

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பவித்ரோற்சவத்தையொட்டி உதய கருட சேவையும், தீர்த்தவாரியும் நடைபெற்றது.
பழமை வாய்ந்ததும், 108 வைணவத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3-வது திருத்தலமாகப் போற்றப்படும் இக்கோயில் 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தமிழ் பாடல்கள் அறியப்பட்டதுமான இக்கோயில் வைணவ தலங்களில் முக்கியமான தலமாகும்.
சிறப்பு வாய்ந்த கோயிலில் இந்த மாதம் 22-ம் தேதி பவித்ரோற்சவ விழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி,நேற்று வரை பெருமாள்தாயாருடன் புறப்பாடு நடைபெற்றது. இவ்விழாவின் இறுதி நாளான உதய கருட சேவை நடைபெற்றது. இதில் தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காவிரி ஆற்றின், சாரங்கபாணி படித்துறையில் தீர்த்தபேரருக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி, வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.