

நீ
ரோட்டத்தைத் தடுத்துக்கொண்டிருக்கும் உறைபனிப் பாளம்போல அறிவு என்பது புரிதலுணர்வுக்கு முட்டுக்கட்டை என்று பவுத்த மதத்தில் கருதப்படுகிறது. ஒரு விஷயத்தை உண்மை என்று கருதி அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தோம் என்றால் உண்மையே நேரில் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டினாலும் நாம் திறக்க மாட்டோம். விஷயங்கள் யாவும் தாமாகவே தம்மை நம்மிடம் வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவற்றைக் குறித்த நம் எண்ணங்களை நாம் கைவிட வேண்டும்.
இதைப் பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். மனைவியை இழந்தவரும் தன் ஐந்து வயது மகனை மிகவும் நேசிப்பவருமான இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தபோது, கொள்ளையர்கள் வந்து அவரது கிராமம் முழுவதையும் எரித்துவிட்டு, அவருடைய மகனைத் தூக்கிச்சென்றுவிட்டனர். அந்த மனிதர் ஊர் திரும்பியபோது, எல்லாம் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் பதறிப்போகிறார். கருகிக் கிடந்த குழந்தையின் சடலமொன்றைத் தன்னுடைய குழந்தையென்று நினைத்துக்கொண்டு, தன் தலைமுடியையெல்லாம் பிய்த்துக்கொண்டு மார்பில் அடித்துக்கொள்கிறார், கட்டுப்படுத்தவே முடியாதபடி அழுது ஓலமிடுகிறார். ஈமச்சடங்குக்கு ஏற்பாடு செய்து, அந்தச் சடலத்தை எரியூட்டுகிறார். எரியூட்டிய பின் சாம்பலையெல்லாம் எடுத்து அழகான வெல்வெட் பையொன்றுக்குள் கொட்டுகிறார். வேலை நேரத்தின்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் என்று சாம்பல் நிரம்பிய அந்தப் பையை எப்போதுமே தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் அவரின் உண்மையான மகன் கொள்ளையர்களிடமிருந்து தப்பி, தன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்துவிடுகிறான். அவனுடைய தந்தை புதிதாகக் கட்டிய குடிலுக்கு நள்ளிரவு வேளையில் வந்து கதவைத் தட்டுகிறான். அந்த இளம் தந்தை இன்னும் சாம்பல் பையைச் சுமந்தபடி அழுதுகொண்டிருக்கிறார். “யாரது?” என்று அவர் கேட்டார். ”அப்பா, நான்தான். கதவைத் திறங்கள், உங்கள் பிள்ளைதான் கூப்பிடுகிறேன்” என்று அந்தப் பையன் பதிலளிக்கிறான். யாரோ ஒரு பையன் தன்னை நையாண்டி செய்கிறான் என்று மிகவும் கலக்கமான அந்த மனநிலையில் நினைத்துக்கொண்டு, அந்தப் பையனைப் போய்த் தொலையச் சொல்லி அந்தத் தந்தை கத்துகிறார். தொடர்ந்து அழுதுகொண்டுமிருக்கிறார். அந்தப் பையன் திரும்பத் திரும்பக் கதவைத் தட்டுகிறான், ஆனால், அந்தத் தந்தையோ அவனை உள்ளே விடவில்லை. இப்படியே நேரம் கடக்கிறது, கடைசியில் அந்தப் பையன் போய்விட்டான். அதற்குப் பிறகு அந்தத் தந்தையும் மகனும் ஒருபோதும் சந்தித்துக்கொள்ளவேயில்லை. இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு, புத்தர் இப்படிக் கூறினார், “சில நேரம், சில சூழல்களில் எதையோ ஒன்றை உண்மை என்று நாம் நினைத்துக்கொள்வோம். அதையே ரொம்பவும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தோம் என்றால் உண்மையே நேரில் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டினாலும் நாம் திறக்க மாட்டோம்.”
அறிவுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பது புரிதலுணர்வுக்கான சரியான வழிமுறை அல்ல. புரிதலுணர்வு என்றால் நம் அறிவைத் தூக்கியெறிய வேண்டும் என்று பொருள்படும். உங்கள் அறிவைக் கடந்துசெல்ல உங்களால் இயல வேண்டும், ஏணி மீது ஏறிச்செல்வோம் அல்லவா, அதுபோல. ஏணியின் ஐந்தாவது படியில் நின்றுகொண்டு நீங்கள்தான் மிகவும் உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆறாவது படிக்கு நீங்கள் ஏறிச்செல்வீர்கள் என்று சிறிதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா! விட்டுவிடுவது என்பதுதான் இதிலுள்ள உத்தி. கடந்துசெல்ல வேண்டுமென்றால் நம் பார்வைகளையும் அறிவையும் விட்டுவிட வேண்டுமென்பதுதான் எப்போதுமே புரிதலுணர்வுக்கான பவுத்த வழிமுறையாகும். இதுதான் மிகவும் முக்கியமான போதனை. அதனால்தான், புரிதலுணர்வைப் பற்றிப் பேசும்போது தண்ணீரையே எப்போதும் நான் உதாரணமாகக் காட்டுகிறேன். அறிவு என்பது திடத்தன்மை வாய்ந்தது; புரிதலுணர்வுக்குச் செல்லும் வழியை அது அடைத்துக்கொள்கிறது. நீரோ பாய்ந்தோடக்கூடியது, எல்லாவற்றையும் ஊடுருவக்கூடியது.
(திஹ் நட் ஹன், பிரான்ஸில் வசிக்கும் வியத்நாமிய பௌத்தத் துறவி, அவரது ‘பீயிங் பீஸ்’ (Being Peace) என்ற நூலிலிருந்து சிறு பகுதி இங்கே தரப்பட்டிருக்கிறது.)
தமிழில்: ஆசை