

வே
டன் ஒருவன் வனத்தின் நடுவே மனைவியுடன் வாழ்ந்துவந்தான். ஒரு நாள் வேடன் மனைவி, அங்குள்ள திணைப்புனைத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு யானை அந்த நிலத்துக்கு வந்தது.
அதனைக் கண்ட வேடன் அருகிலிருந்த பெரிய புற்றின் மீது ஏறி நின்று யானையை நோக்கி அம்பை எய்தான். அந்த அம்பு யானையின் மத்தகத்தில் தைத்தது. கோபங்கொண்ட யானை வேடனைத் தாக்க ஓடி வந்தது. யானை தன் மீதிருந்த அம்பை எடுக்க புற்றின் மீது தன் தலையை உராய்ந்தது. அப்போது புற்றுக்குள்ளிருந்த பாம்பு ஒன்று கோபமுடன் வெளியேறி அங்கிருந்த வேடனைக் கடித்தது. வேடன் தன் கத்தியால் பாம்பை வெட்டி இரு துண்டாக்கினான். பாம்பு இறந்தது. விஷம் ஏறிய வேடனும் இறந்தான். அம்பு பாய்ந்த யானையும் அங்கேயே வீழ்ந்து இறந்தது.
அந்நேரம் அவ்வழியே வந்த ஒரு நரி மூன்று உடல்களையும் பார்த்து மகிழ்ச்சி கொண்டது. பாம்பினுடல் ஒரு நாளும் வேடன் உடல் ஒருவாரமும் யானையின் உடல் ஒரு மாதமும் உணவாகுமென்று ஆசையுடன் எண்ணியது. இப்போதைய பசிக்கு வில்லில் உள்ள தோல் வாரை மட்டும் தின்னலாம். மற்றவற்றை பின்னர் சாப்பிடலாம் என்றெண்ணி வில்லின் நாணைக் கடித்தது. உடனே வில்லின் வளைவு நிமிர வில்லின் ஒரு முனை நரியின் தொண்டையில் பாய்ந்து நரி இறந்தது.
இந்த நரியைப் போல் நமக்கு கிடைக்கும் செல்வங்களை அறச் செயல்கள் செய்யாமல், நாமே அனுபவிக்க வேண்டுமென்று இருந்தால் அச்செல்வங்களை எவ்வழியேனும் இழந்து மேலும் மேலும் துன்புறுவோம்.