Last Updated : 03 Nov, 2017 12:21 PM

 

Published : 03 Nov 2017 12:21 PM
Last Updated : 03 Nov 2017 12:21 PM

குபேரனுக்கு அருளிய நிதீஸ்வரர்: அன்னாபிஷேகத்தில் கலந்துகொள்ளுங்கள்

‘எவ்வளவு சம்பாதிச்சு என்ன... கையில காசு பணம் தங்கமாட்டேங்கிதே...’ என அலுப்பும் சலிப்புமாக வாழ்கிற வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம்... ஒரு விடுதலை... ஒரு நல்ல வழி... இதோ... நம் கண்ணுக்கு முன்னே!

வாழ்வில், ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வந்து, உங்கள் பாதம் பட்டால் போதும். ஒரேயொரு முறை... இங்கே உள்ள சிவனாரை கண்ணாரத் தரிசித்தால் போதும். ஒரேயொரு தடவை... மனதார வேண்டிக் கொண்டால் போதும்... உங்கள் வீட்டில் குபேர கடாட்சம் நிச்சயம்.

சுபிட்சமும் ஐஸ்வர்யமும் எப்போதும் குடிகொண்டிருக்கும் என்பது உறுதி! அந்தத் திருத்தலம்... அன்னம்புத்தூர். அங்கே நமக்கு அருளும்பொருளும் தருவதற்காகக் காத்திருப்பவர்... ஸ்ரீநிதீஸ்வரர்! குபேரனுக்கு அருளிய சிவபெருமான் இவர்.

சென்னை- விழுப்புரம் சாலையில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர். திண்டிவனம்- புதுச்சேரி செல்லும் வழியில், வரகுப்பட்டு எனும் ஊருக்கு அடுத்துள்ள சாலையில் சுமார் 4 கி.மீ. பயணித்தால், அன்னம்புத்தூரை அடையலாம். அங்கே நம் விதியைத் திருத்தி எழுதி, குபேர யோகத்தைத் தந்தருளும் ஸ்ரீநிதீஸ்வரரை தரிசிக்கலாம்! பஸ் வசதி குறைவுதான்; வரகுப்பட்டில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

அன்னம்புத்தூர் எனும் அழகிய கிராமத்தில், மாமன்னன் ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்து நிவந்தங்கள் அளித்த புராதன & புராணப் பெருமை கொண்ட ஆலயம் இது. 1008-ஆம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் கோயில் ஸ்ரீநிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன.

குபேரனுக்கு அருள்பாலித்த சிவனார் குடிகொண்டிருக்கும் தலம் எனும் பெருமையும் அன்னம்புத்தூர் தலத்துக்கு உண்டு. பிரம்மாவின் சாபம் நீங்குவதற்காக, அவர் இங்கே பிரம்ம தீர்த்தக் குளத்தை உருவாக்கி, தினமும் சிவபூஜை செய்து, கடும் தவம் புரிந்து, சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். ஒருகாலத்தில், திருவண்ணாமலை திருத்தலத்துக்கு இணையானதாகப் போற்றப்பட்டது இந்த அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் கோயில் என்று பெருமையுடன் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்!

இதோ... கருங்கல் திருப்பணிகள், அதில் அழகழகாய் சிற்ப நுட்பங்கள், கோஷ்டத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் என பொலிவுடன் திகழ்கிறது ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம்.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கும் சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி என இந்தப் பக்கம் செல்பவர்கள், கோயிலின் பெருமைகளை உணர்ந்து, மெயின் ரோட்டில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்று, அன்னம்புத்தூருக்கு வந்து, சிவனாரைத் தரிசித்து, மெய்சிலிர்த்துச் செல்கிறார்கள்.

அம்பாள் ஸ்ரீகனகதிரிபுரசுந்தரி கருணையே வடிவெனக் கொண்டவள். பேரழகி. இவளுக்கு செவ்வாய், வெள்ளிகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட மங்கல காரியங்கள் யாவும் விரைந்து நடக்கும். விழாக்கள் விமரிசையாக நடந்து, இல்லத்தில் சந்தோஷத்தை குடிகொள்ளச் செய்யும் என்கிறார்கள் ஏராளமான பக்தர்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர் கிராமம். இந்த ஊரில் உள்ள அன்னம்புத்தூர் ஆலயத்தில், பெயருக்கேற்றாற் போல் விமரிசையாக நடைபெறுகிறது அன்னாபிஷேகப் பெருவிழா.

மாலையில், சிவனாருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு, சிவலிங்கத் திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறும். இந்த விழாவில் சென்னை, மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் முதலான மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

அதேபோல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்னாபிஷேக வைபவத்தை அடுத்து, அனைவருக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்படும்.

அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்துகொள்ளுங்கள். குபேரனுக்கு அருளிய சிவனார், நமக்கும் அருளக் காத்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x