

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா, நேற்று காலை அம்மன் சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நேற்றிரவு சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து, தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந் தருள்கிறார். இரண்டாம் நாளில் அன்ன வாகனம், 3-ம் நாளில் தங்க காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார். அன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மூலவர், உற்சவர் அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் வைப வமும் நடைபெறும்.
தொடர்ந்து, 4-ம் நாள் இரவு வெள்ளி சிம்மாசனம், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனம், 6-்ம் நாள் கிளி வாகனம், 7-ம் நாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருள்கிறார். மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் வலம் வந்த பின் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். அன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை நடைபெறும்.
8-ம் நாள் இரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். 9-ம் நாள் காலை 9.40-மணிக்கு மேல் 10.04 மணிக்குள் சட்டத் தேரிலும், இரவில் புஷ்ப விமானத்திலும் எழுந்தருள்கிறார். 10-ம் நாள் (ஜூலை 29) இரவு 7 மணியளவில் அதியற்புத கனகதண்டியல் (சயனத் திருக்கோலம்) அலங்காரத்தில் எழுந்த ருள்கிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலை மையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.