Last Updated : 04 Nov, 2017 12:20 PM

 

Published : 04 Nov 2017 12:20 PM
Last Updated : 04 Nov 2017 12:20 PM

திருமாலுக்கும் குருவானவர் ...ஸ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி!

குரு தட்சிணாமூர்த்தி, இன்றைக்கும் கல்வியையும் கலைகளையும் தந்து அருள்பாலிக்கும் ஒப்பற்ற தெய்வமாகத் திகழ்கிறார். இவர் திருமாலுக்கும் குருவாக இருந்து அருள்பாலித்தவர் என்பது தெரியுமா.. அந்தத் திருத்தலம் ... திருவையாறு !

தஞ்சாவூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவையாறு தலம். இங்கே ஸ்ரீஐயாறப்பர் என்றும் ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் என்றும் பெயர் கொண்டு காட்சி தருகிறார் சிவனார்.

மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம், திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். ‘ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே’ என அப்பர் பெருமான், தேவாரம் பாடிய ஒப்பற்ற தலம் இது என்று போற்றுகின்றனர் சிவனடியார்கள்!

ஸ்ரீஐயாறப்பரை மனதில் நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்தால், நம்முடைய பாவங்கள் விலகும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்! அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.

திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம்! எனவே இந்தத் தலத்தின் தட்சிணாமூர்த்திக்கு, ஸ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம் அமைந்ததாம். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி அற்புதமாகக் காட்சி தரும் அழகே அழகு!

இந்தக் கோயிலில், தியான மண்டபம் உள்ளது. இங்கே வடக்குப் பார்த்து அமர்ந்திருக்கிற ஸ்ரீஆதிவிநாயகரைத் தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும் என்பது இந்தத் தலத்தின் ஐதீகம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

வள்ளலார் சுவாமிகள், தியாகைய்யர் முதலான பலரும் இங்கே பலகாலம் தங்கி தியானம் செய்து, ஈசனின் பேரருளைப் பெற்றுள்ளனர் எனும் சிறப்பு இந்தத் தியான மண்டபத்துக்கு உண்டு! மேலும் இந்தத் தலத்துக்கு அருகில்தான் காவிரியாறும் தியாகப்பிரம்மத்தின் திருச்சமாதி பிருந்தாவனமும் அமைந்து உள்ளது. வருடந்தோறும், இங்குதான் தியாகராஜர் ஆராதனை விமரிசையாக நடைபெறுகிறது.

வியாழக்கிழமை மற்றும் மாதந்தோறும் வருகிற உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும்.

ஸ்ரீஐயாறப்பரையும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகியையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபடுங்கள்; ஞானமும் யோகமும் பெறுவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x