

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் உள்ள ரஞ்சனி பாண்பொழி எனும் ஊரின் மேற்கே, சுமார் மூன்று கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பசுமையான சூழலில் ஒரு குன்றின் மீது திருமலைக் கோயில் அமைந்துள்ளது. திருமலைக்குமரன் என்ற பெயரில் முருகன் இங்கே அருள்பாலிக்கிறார்.
ஆதியில் இத்திருமலைத் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமான் அண்மையிலுள்ள அச்சன்கோயிலுக்குப் போகிற வழியில் புழுதியாற்றுக் கோட்டையில் ஓர் வனத்தில் கோயில் கொண்டிருந்தார். மழை வெள்ளத்தில் குமரன் கோயில் அழிந்து, குமரப் பெருமானின் உருவம் ஆற்று மணலில் புதைந்தது.
இத்திருமலையில் ஆதி காளி கோவிலின் அர்ச்சகராக இருந்த பூவன் பட்டர் என்ற அடியாரின் கனவில் முருகன் தோன்றி தான் புதைந்திருக்கும் அவ்விடத்தை ஒற்றை வரிசையாகச் செல்லும் எறும்புக்கூட்டம் நின்று காட்டும் என்று அடையாளம் கூறினார். இதே செய்தியைப் பந்தள அரசர் கனவிலும் தெரிவித்திருப்பதாக முருகன் கூறி மறைந்தார்.
கனவில் முருகன் இட்ட கட்டளையை ஏற்று பூவன் பட்டரும் பந்தள மன்னரும் முருகன் சிலை புதைந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்து, பயபக்தியுடன் எடுத்து வந்து திருமலையின் மீதுள்ள குவளைப் பொய்கையின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் வைத்தனர்.
இன்றளவும் ஆண்டு முழுவதும் இப்பொய்கையில் நீர் நிறைந்து காணப்படுகிறது. நாள்தோறும் குவளை மலர்கள் பூப்பதால் இதற்குப் பூஞ்சுனை என்று பெயர் வந்தது. இச்சுனையின் நீரால் தான் நாள்தோறும் திருமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பொய்கையின் அருகே உள்ள புளியமரம் இக்கோயிலின் தல விருட்சமாகும்.
இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மரமாகும். அதன் அடியில் உள்ள சன்னதியை இன்றும் உத்தண்ட வேலாயுதம் என்று வழங்குகின்றனர். பல்லாண்டுகளுக்குப் பின்னர் நெல்லையம்பலம் மயிலப்பன் என்ற குமரத் தொண்டர் ஓர் ஆலயம் செய்வித்து, திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து, மானியங்களையும் அளித்தார். அதுவே நாம் இன்று தரிசிக்கும் ஆலயமாகும்.
தொடர்ந்து வடகரையார் என்னும் சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர் மற்றும் நெல்லை மாவட்டம் நெடுவயலைச் சார்ந்த சிவகாமி பரதேசி என்னும் அம்மையார் ஆகியோர் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
திருமலைக் கோயிலின் சிறப்புகள்
திருமலை முருகன் நான்கு கைகளுடன் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். மேல் நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதமும், மேல் நோக்கிய இடது கையில் வச்சிராயுதமும், கீழ் நோக்கிய வலது கையில் அபயக்கரமும், கீழ் நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரையுடன் நின்ற கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
இம்முருகனுக்குப் பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த “தேவி பிரசன்ன குமார விதி” படி எட்டுக்கால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளியறையில் சுவாமியைப் பாதுகை செய்வது கிடையாது. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை செய்யப்படுகிறது.
திருமலைக் கோயிலின் படிகள் தொடங்கும் அடிவாரத்தில், வல்லபை மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இதில், வல்லபை விநாயகர் அருள் பாலிக்கிறார். அவரை வணங்கி, முருகன் நாமத்தை உச்சரித்தபடியே பக்தர்கள் 544 படிகள் ஏறினால், மலை உச்சியை அடையலாம். வாகனங்கள் செல்வதற்குத் தனியாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
திருமலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் சன்னதி அமைந்துள்ளது. மூலவரான முருகக் கடவுளின் சன்னதியிலிருந்து 16 படிகள் மேலே ஏறினால் உச்சிப் பிள்ளையாரை வணங்கலாம்.
திருமலையின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக் கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்பர்.
இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச் சன்னதியாக அமைந்துள்ளது.இத்தெய்வம் திருமலையின் காவல் தெய்வமாகும். திருமலைக் கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு காட்சியளிக்கிறார்.
நட்சத்திரக் கோயில்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. தங்களது ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய கோயிலை அனைவரும் ஒரு முறையாவது வழிபட வேண்டும் என்பது பெரியோர் கூற்று. அந்த வகையில், விசாக நட்சத்திரத்திற்கான தலம் இது என்பது கூடுதல் சிறப்பாகும்.