

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, நேற்று கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் 7 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், உகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆகிய 4 விசேஷ நாட்கள் தொடங்குவதற்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையில் கோயில் முழுவதும் பன்னீர், குங்குமம், மஞ்சள், சந்தனம், பச்சை கற்பூரம் போன்ற வாசனை மிக்க திரவியங்களால் சுத்தப்படுத்தப்படும். இதனை ஆழ்வார் திருமஞ்சனம் அல்லது பரிமளம் என்றழைக்கின்றனர்.
இதன்படி, வரும் 17-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற இருப்பதால், ஆகம விதிகளின்படி நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் கோயில் கற்பகிரகம், பலிபீடம், கொடிக்கம்பம், உப சன்னதிகள், முகப்பு கோபுர வாசல், தங்க விமான கோபுரம், மடப்பள்ளி என அனைத்தும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது.
இதனால் 7 மணி நேரம் வரை பக்தர்கள் சுவாமியை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதிக்கவில்லை. மதியம் 11 மணிக்குபின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.