

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர். மலையே மகேசன் என போற்றப்படும், திருவண்ணாமலையில் உள்ள ‘அண்ணாமலை’யை வலம் வந்து பக்தர்கள் தினசரி வழிபடுகின்றனர்.
இதில், பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கூடுதல் சிறப்பாகும். அதன்படி, ஆனி மாத பவுர்ணமியையொட்டி, 14 கி.மீ., தொலைவுள்ள மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். மாலை 4 மணிக்கு பிறகு, கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
விடிய, விடிய பல லட்சம் பக்தர்களின் கிரிவலம் தொடர்ந்தது. ஓம் நமசிவாய என ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, நேற்று அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமி நாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் அறிவித்த நிலையிலும், சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.50-ஐ வசூலிக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறப்பு கட்டண தரிசனம் வசூலித்து வருவது குறித்து சமூக வலைதளத்தில் வெளியானதும், நேற்று பிற்பகலில் இருந்து சிறப்பு தரிசனத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொது தரிசன சேவையில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பெரிய தெருவில் இருந்து இரட்டை பிள்ளையார் கோயில் தெரு வழியாக அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் வழக்கம்போல் நேற்றும் மூடிவிட்டனர். இதற்கு பக்தர்கள், வணிகர்கள், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரட்டை பிள்ளையார் கோயில் தெருவை மூடுவதால், அந்த தெருவில் கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதற்கு, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு வழியாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்லும்போது நெருக்கடி ஏற்படு வதாக கூறி காவல் துறையினர் விளக்கமளித்தனர்.