

காரைக்கால்: காரைக்காலில் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா நேற்று இரவு மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது.
காரைக்கால் அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக, கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு விழா, நேற்று இரவு பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நேற்று மாலை சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. பின்னர், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து பரமதத்தரை மாப்பிள்ளை அலங்காரத்தில், அம்மையார் கோயிலுக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துவரும், மாப்பிள்ளை அழைப்பு வைபவம் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.
இதில், கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூலை 1) காலை 7 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடைபெறும்.
மாலை 6.30-க்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டியாரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா தொடங்கி நடைபெறும். முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா நாளை (ஜூலை 2) நடைபெறுகிறது.