

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆனித் திருமஞ்சன தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன தரிசனமும் சித்சபை பிரவேசமும் இன்று (ஜூன் 26) நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 5-வது நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடிட, தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
மண்டகபடி: பின்னர் கீழ வீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று மாலையில் கீழ வீதியில் நிலையை அடைந்தன. 4 வீதிகளிலும் மண்டகபடிதாரர்கள் சுவாமிகளுக்கு சிறப்பு படையல் செய்தனர்.
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், தில்லை திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப் பணியை மேற்கொண்டனர். சிவனடியார்கள் சிவ நடனம் ஆடியபடி சென்றனர். தேர்களுக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.
இரவு, தேர்நிலையில் இருந்து சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜர் தீவிட்டி முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்கிட கோயில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எடுத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று சித்சபை பிரவேசம்: அதைத்தொடர்ந்து இன்று ( ஜூன் 26) ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், சித்சபை பிரவேசமும் நடடைபெறும். நாளை இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நகரில் வெளிநாடு, வெளி மாநில மற்றும் உள்ளூர் பக்தர்கள் குவிந்துள்ளனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.