பழநியில் தங்க ரத கட்டணத்தை உயர்த்த முடிவு: கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
பழநி: பழநி முருகன் கோயிலில் தங்க ரதப் புறப்பாடு கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்துவது தொடர்பாக ஜூலை 15 வரை பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதப் புறப்பாடு நடைபெறுகிறது. ரூ.2,000 செலுத்தும் பக்தர்கள் தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தங்க ரதம் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாத தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தங்க ரதம் இழுக்கும் பக்தர்களுக்கு கைப்பிடி உள்ள திருகு மூடியுடன் கூடிய எவர்சில்வர் குடத்துடன், பிரசாதம் வழங்கும் திட்டத்தின்படி, தங்க ரத கட்டணத்தை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக ஜூலை 15-க்குள் பக்தர்கள் தெரிவிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
