Published : 12 Oct 2017 10:58 AM
Last Updated : 12 Oct 2017 10:58 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 04: அறிவு ஒன்று அநாதியே

‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று திருத்தொண்டத்தொகையில் திருமூலரைச் சிறப்பிக்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். யார் இந்தத் திருமூலர்?

தமிழ்ச் சைவப் பக்தி மரபு கருதுகிற 63 நாயன்மார்களுள் ஒருவர். ‘பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமாகிய’ இறைவனின் இருப்பிடம் திருக்கயிலை. அங்கே இறைவனின் அருகிருந்து அருள் பெற்று வாழ்ந்திருந்த யோகியார் அவர். கூடுவிட்டுக் கூடு பாய்தல் முதலிய சித்திகள் கைவரப் பெற்றவர். திருக்கயிலாயத்தைவிட்டு நீங்கித் தமிழ் வளர்க்கப் பொதிய மலை சேர்ந்த அகத்தியரின் நண்பர். அகத்தியரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் வட கயிலை நீங்கித் தென் பொதியை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார். இடைப்பட்ட பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டவாறே செல்கிறார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தனைக் கண்டு மகிழ்ந்து, திருவாவடுதுறைக்குப் போய் ஆவடு தண் துறை அரனை வணங்கிப் புறப்படும்போது காவிரிக் கரையோரக் காட்டுப்புறத்தில் ஒரு காட்சியைக் காண்கிறார்: மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூலன் என்னும் இடையன் செத்துக் கிடக்கிறான். அவன் மேய்த்து வந்த மாடுகள் அவன் உடலைச் சுற்றி அழுதுகொண்டு நிற்கின்றன. அழுதுகொண்டிருக்கும் மாடுகளின் துயரைத் தீர்க்க நினைக்கிறார் கயிலை யோகியார். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர். தன் உடலை விட்டு செத்துக் கிடக்கும் மூலன் உடலுக்குள் பாய்ந்து திருமூலராக எழுகிறார். மாடுகள் மகிழ்கின்றன. அவற்றை மேய்த்து ஊருக்குள் செலுத்துகிறார்.

மேய்க்கப் போன கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று தேடி வருகிறாள் மூலனின் மனைவி. திருமூலர் இருக்குமிடம் தேடி வந்து, ‘வீட்டுக்கு வராமல் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’ என்று அவரைத் தொட்டாள். ‘உனக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று அவர் விலகினார். அங்கிருந்த பொதுமடம் ஒன்றில் யோகத்தில் அமர்ந்தார். மனைவி ஊர் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்தாள். திருமூலரின் நிலை பார்த்த அவர்கள் ‘இவர் முற்றும் உணர்ந்து பற்றறுத்து விட்டவர்’ என்று அவளை அழைத்துக்கொண்டு அகன்றனர்.

இடையன் மூலனின் உடலில்

காட்டுப்புறத்தில் தான் விட்டுவந்த கயிலை யோகியின் உடலைத் தேடிப் போனார் திருமூலர். உடலைக் காணவில்லை.

தண்நிலவார் சடையார், தாம் தந்தஆ கமப் பொருளை

மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்

கண்ணியஅத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க,

எண்நிறைந்த உணர்வுஉடையார், ஈசர்அருள் எனஉணர்ந்தார்.

(பெரிய புராணம், திருமூலதேவ நாயனார் புராணம், 23)

சடை புனைந்து அதில் நிலவணிந்த இறைவன், மெய்ப்பொருளை ஆகமமாக வழங்கியிருந்தான். அதுவரையில் விண்ணுக்கும் விண்மொழிக்கும் மட்டும் உரியதாக இருந்து வந்த ஆகமப் பொருளை, மண்ணுக்கும் மண்மொழியான தமிழுக்கும் திருமூலரைக்கொண்டு எட்டச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான். திருமூலர் தன்னுடைய பழைய உடலுக்குள் பாய்ந்துவிட்டால் அகத்தியரைக் கண்டு குலாவிவிட்டுத் திருக்கயிலை திரும்பிவிடுவார். அப்படித் திரும்பிவிட்டால் ஆகமப் பொருள் மண்ணில் வழங்காமல் போய்விடும். ஆகவே, இறைவன் கயிலை யோகியாரின் உடலை மறைத்துவிட்டான். இது இறைவனின் திருவுளம் என்று தெளிந்த திருமூலர் இடையன் மூலனின் உடலில் திருமூலராகவே தொடர்ந்தார்.

திருமூலர் குறித்த இன்னொரு கதை

திருவாவடுதுறைக்குச் சென்றார். அங்கே ஓர் அரச மரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். ‘ஒன்று அவன்தானே’ என்று தொடங்கி ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் பாடல்கள் எழுதித் திருமந்திரமாலை ஆக்கி இறைவனுக்குப் புனைந்தார்; பின் இறைவன் திருவடி அணைந்தார் என்று திருமூலதேவ நாயனார் புராணம் சொல்கிறது.

இது இருக்க, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்னும் நூலில் திருமூலரைப் பற்றி வேறொரு கதை வழங்கப்படுகிறது. திருமூலர் ஆகாயவெளியில் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளவரசி மணமான மறுநாளே தன் கணவனைப் பறிகொடுத்து,

‘தச்சன் அடித்த தளம் பெரிய கட்டிலிலே

ஒக்க நெருங்கி ஒரு நாளும் இருக்கலையே;

விதி வந்தால் என்ன கொஞ்சம் விலகி வரலாகாதா?

சாவு வந்தால் என்ன கொஞ்சம் தள்ளி வரலாகாதா?’

என்று கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருந்தாள். அவளது துயரத்தைக் கண்டு வருந்திய திருமூலர் அவளது துயரத்தைத் தீர்க்க எண்ணித் தன் உடலை ஒளித்துவைத்துவிட்டு இறந்துகிடந்த அவளது கணவனின் உடலில் புகுந்து எழ, அனைவரும் மகிழ, கணவனும் மனைவியுமாக இன்புற்று இருந்தனர். ஒரு நாள் மோக வேகத்தில் கணவன் உண்மையைச் சொல்லிவிட, விட்டால் இவன் பழைய உடம்புக்குத் திரும்பி நம்மைவிட்டு நீங்கிப் போய்விடுவானே என்ற பதற்றத்தில் இளவரசி ஆட்களை விட்டுத் திருமூலரின் மூலப் பூத உடலைக் கண்டுபிடித்து அழித்துவிடுகிறாள். மூலப் பூத உடலைத் தேடி வந்த திருமூலர் அதைக் காணாத நிலையில், வேறு வழியில்லாமல், தான் அப்போது தங்கியிருந்த உடலிலேயே தங்கித் தவத்தைத் தொடர்ந்தார்.

ஒளி உடம்பை அடைவதே உயர்நிலை

இரண்டு கதைகளுக்கும் பொதுக்கூறு கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்னும் சித்தி. அதைக் குறித்துத் திருமூலர் ஏதேனும் கூறியிருக்கிறாரா என்று பார்த்தால் ஒன்றுமில்லை. திருமந்திரத்தில் ‘அட்டமாசித்தி’ என்னும் தலைப்பின்கீழ் வரும் பாடல்கள் சிலவற்றில் பரகாயம் மேவுதல் என்று குறிக்கிறார் திருமூலர்.

காயாதி பூதம் கலைகால மாயையில்

ஆயாது அகல அறிவுஒன்று அனாதியே

ஓயாப் பதிஅதன் உண்மையைக் கூடினால்

வீயாப் பரகாயம் மேவலும் ஆமே

(திருமந்திரம் 643)

‘மாயை’ என்பது ஆகாயம் முதலிய பூதங்களையும் கலை, காலம் முதலியவற்றையும் உள்ளடக்கிய சடப்பொருள். உலகமோ சடப்பொருளாகிய இந்த மாயையின் விளைபொருள். ஆகவே தோன்றி, நின்று, அழிவது; நிலையில்லாதது. நிலையில்லாத இந்த உலகத்தின் தன்மையை ஆராயாமல், அதையே நிலை என்று நம்பி, அதிலேயே அறிவு ஒன்றித் தோய்ந்து கிடக்கிறது அனாதியாகிய உயிர். சார்ந்து நிற்கத்தக்க பொருள் நிலையற்றதாகிய இந்த உலகம் அன்று; உயிரின் ஈடேற்றத்துக்காக இடையறாது இயங்கிக்கொண்டிருக்கிற இறைவன்தான்.

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(குறள் 351)

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று நம்புகிற அறியாமைதான் எல்லாச் சிடுக்குகளுக்கும் காரணமென்று வள்ளுவரும் சொல்கிறார் இல்லையா? எனவே, நிலையில்லாத பொய்ப்பொருளைவிட்டு நிலையான மெய்ப்பொருளில் தோயும்போது அழியாத ஒளியுடம்பை அடையலாம் என்பது திருமூலர் கருத்து. வள்ளலார் இந்தக் கருதுகோளை எடுத்துக்கொண்டு,

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன்; எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன்; உயர்நிலை பெற்றேன்; உலகில் பிறநிலையைப்

பற்றேன்; சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினேனே

(திருவருட்பா, ஆறாம் திருமுறை, 4745)

என்று மகிழ்கிறார். வள்ளலார் பேசுகிற கல்வி இன்றைய கல்விபோல அவை நடுவே ‘நீட்’டோலை வாசிக்கும் கல்வி அல்ல; ‘தேர்வானவன் வா! தேராதவன் சா!’ என்கிற சாகத் தூண்டுகிற தம்பட்டக் கல்வி அல்ல; எல்லா உயிரும் தன் உயிர் எனவே நினைந்து இரங்கும் கருணை நெறியான சாகாக் கல்வி. அதைக் கற்றார் உயர்நிலை பெற்றார்; ஒளி உடம்பு உற்றார்.

ஒளி உடம்பை அடைவதுதான் பரகாயப் பிரவேசம்—கூடுவிட்டுக் கூடு பாய்தல். இதை அடிப்படையாக வைத்துக் கயிலை யோகியார் இடையன் மூலன் உடம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் என்று கதை செய்துவிட்டார்கள். மேய்ப்பனின் சாவுக்காக வருந்திய ஐந்தறிவு மாடுகளின் துயரைத் தீர்ப்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாயலாம் என்றால், கணவனின் சாவுக்காக வருந்திய ஆறறிவு இளவரசியின் துயரைத் தீர்ப்பதற்காக ஏன் கூடுவிட்டுக் கூடு பாயக் கூடாது என்று யாரோ கருதியதன் விளைவுதான் அதே பாணியிலான மற்றொரு கதை.

மேலும், அகத்தியரைச் சந்திக்கவே தான் கயிலையிலிருந்து தமிழகம் வந்ததாகவோ வரும் வழியில் இறந்து கிடந்த மூலனின் உடம்பில் புகுந்ததாகவோ திருமந்திரத்தின் எந்தப் பகுதியிலும் திருமூலர் குறிப்பிடவில்லை.

மாடு மேய்க்கிற இடையர்கள் ஞானம் பெற்று இடைக்காட்டுச் சித்தர்கள் ஆகமாட்டார்களா? திருமந்திரம் போன்ற மூவாயிரம் பாடல்கொண்ட நெடிய ‘நீட்’டோலை வாசிக்க மாட்டார்களா? ஞானத்தின் அளவுகோல் எப்போதும் வடக்கையே சார்ந்ததா? ஞானிகள் எப்போதும் வடவர்களா? வடக்கிருந்து வரும் ஞானிகள் இறைவனை நன்றாகத் தமிழ் செய்வார்களா என்று வெட்டியாக விசாரிப்பதை விட்டுவிட்டு, ‘யாவர்க்குமாம், யாவர்க்குமாம்’ என்று தென்னன் பெருந்துறையானாகிய திருமூலன் சமூகத்தில் உள்ள யாவர்க்கும் செலுத்திய அன்பை விசாரிப்போம்.

(விசாரணை தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x