

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த தீமிதி விழா 22 நாட்கள் நடைபெறும்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான தீமிதி விழா, கடந்த மே மாதம் 22-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. மேலும், விழாவின் 21-ம் நாளான நேற்று காலை துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
இதில், கோயில் வளாகத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவபொம்மை வடிவமைக்கப்பட்டு, பூசாரிகளின் சிறப்பு வழிபாடுகளுடன் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், மாலையில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில், சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டனர்.