

ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீதியாகேச பெருமான் உறையும் திருவொற்றீஸ்வரர் தலத்திற்கு விஜயம் செய்த ஆதிசங்கர பகவத் பாதாள் அம்மன் சந்நிதியின் முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீஆதிசங்கரரின் சிலாரூபம் ஒன்றும் இத்திருக்கோயிலில் காணக் கிடைக்கிறது. ஆதிசங்கரருக்குப் பின்னர் வந்த ஆச்சார்யர்கள் இத்திருத்தலத்தில் பல ஆன்மிகப் பணிகளைச் செய்தனர். அந்த வகையில் ஸ்ரீகாமகோடி சங்கர மடம், இத்திருகோயிலின் தெற்கு மட வளாகத்தில் அமைக்கப்பட்டது. மஹா பெரியவர் ஸ்ரீசந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் இத்திருத்தலத்திற்கு யாத்திரையாக வந்திருந்தபோது அம்மடத்தைச் செப்பனிடச் செய்தார். இவற்றில் உலக நன்மை கருதி அன்றாட பூஜைகள் நடைப்பெற ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இத்திருத்தலம் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பராசக்தியின் தந்தை தட்சன் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு தன் மருமகனான சிவனை முறைப்படி அழைக்கவில்லை. அதனால் சிவனும் அங்கு செல்லாமல் தவிர்த்தார். தந்தை மீது கொண்ட பாசம் காரணமாக, பார்வதி சிவன் தடை செய்தபோதும் அதனை மீறி யாகத்துக்குச் சென்றாள். அங்கு சிவனுக்கு அவமரியாதை செய்யப்பட்டதை அறிந்து யாகம் முழுமையடையக் கூடாது என்பதற்காக, அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்தாள்.
அவளது உடல் பாதி கருகியும், கருகாமலும் இருந்த நிலையில், அவ்வுடலை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்ட சிவன் ருத்திர தாண்டவம் ஆடினார். இதனைத் தடுக்க விஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். ஸ்ரீவிஷ்ணுவும் தனது சக்ராயுதத்தை ஏவினார். பார்வதியின் இறந்த உடலை பலகூறாக ஆக்கியது அச்சக்கரம். பல துண்டுகளான பார்வதியின் உடல் விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தச் சக்தி பீடங்களில் ஒன்று திருவொற்றியூர் வடிவுடை அம்மன் என்கிறது இத்திருக்கோயில் தல புராணம்.
இங்குள்ள ஈசன் மற்றும் வடிவுடை அம்மனைக் குறித்து அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் பல உண்டு. முத்துசாமி தீட்சிதர் இத்தலத்தைப் பற்றிய பாடல்களை எழுதியிருக்கிறார். வள்ளலார் சுவாமிகள் இவ்வடிவுடைய அம்மனை போற்றி ஸ்ரீவடிவுடை அம்மன் மாணிக்கமாலை என்ற பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார்.
பிரளயத்திற்கு பின் தோன்றிய முதல் சிவன் என்பதால் இச்சிவனுக்கு ஆதிபுரீஸ்வரர் என்பது திருநாமம். நீரை வெப்பத்தால் ஒற்றியெடுத்ததால் ஒற்றீஸ்வரர் என்றும் பல காரணப் பெயர்கள் கொண்டு விளங்குகிறார். வாசுகி என்ற பாம்பிற்கு புற்றாக மாறி அடைக்கலம் அளித்ததால் படம்பக்கநாதர் என்ற பெயரும் உண்டு.
இந்த ஆதிபுரீஸ்வரர் புற்று மணலால் ஆனவர் என்பதால் நித்தியபடி அபிஷேகங்கள் கிடையாது. ஆண்டு முழுவதும் மூடி வைக்கப்பட்டுள்ள இச்சுயம்பு லிங்கம் ஓராண்டில் மூன்று நாட்களுக்கு மட்டும் திறக்கப்பட்டு புனுகுத் தைலம் பூசப்படும். அந்த தைலம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மிக அழகிய பிரம்மாண்டமான ராஜகோபுரம் கொண்ட இத்திருக்கோயில் அழகிய கற்சிலைகளையும் கொண்டது.