

எத்தனையோ மகான்களுக்கும் தபஸ்விகளுக்கும் திருச்செந்தூர் தலத்துக்கும் எண்ணற்ற தொடர்புகள் உண்டு. முக்கியமாக, ஸ்ரீஆதிசங்கரரின் தொடர்பு மெய்சிலிர்க்கச் செய்யும்.
ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர்.
இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியந்தார் ஆதிசங்கரர். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்ரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றிப் பாடித் தொழுதார். கந்தனின் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது திருவுருவச் சிலை உள்ளது.
இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். அப்படியே செய்தான் அரசன். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது என்கிறது ஸ்தல வரலாறு. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் உள்ளது.
திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவர் வென்றிமாலை. மிகச் சிறந்த முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்துபோனான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் கோபம் அடைந்த கோயில் நிர்வாகத்தினரால் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்!
அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஓர் அசரீரி. 'செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!' என்றது. அப்படியே செய்தான். அவனிடம், 'சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகப் பெருமான் கட்டளையிட்டிருக்கிறார்!' என்றார் சாஸ்திரியார்.
பிறகு சாஸ்திரிகள் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை.
எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு, முருக பக்தர் ஒருவரிடம் கிடைத்தது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பாண்டிச் சீமை கடந்து, கடல் கடந்தும் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.