

சக்தி பெரிதா? சிவம் பெரிதா? என்ற கேள்வி இறைவன், இறைவியிடம் எழுந்தது. இதனை ஓர் ஆடல் போட்டியின் மூலம் தீர்மானிக்க தேவர்கள் முடிவு செய்தனர். நாரதர் யாழ் மீட்ட, பிரமன் ஜதி சொல்ல, மகாவிஷ்ணு தாளமிட, நந்தி மத்தளம் கொட்ட, இவற்றுடன் சரஸ்வதியும் வீணை நாதத்தை இழைத்தாள்.
இந்த இசையைக் கேட்டுக் காளியாக இருந்த சக்தி குதூகலித்தாள். சிவனோ சிலிர்த்தெழுந்தார். போட்டி என்றால் சபதமும் உண்டே. தோல்வியுற்றவர் தில்லையம்பதியை விட்டு வெளியேறி ஊர் எல்லையில் குடியேற வேண்டும் என்று முடிவானது. இருவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
ஆடல் வல்லான் ஆடலும், சிரசின் நெருப்பும் நாற்ப்புறமும் வீச, காளியின் ஆட்டமும் அதிரத் தொடங்கியது. நடராஜர் ஆட்டத்தால் மேரு மலை அதிர்ந்தது. இந்த நடனத்தின் மூலம் நிருத்தம், நிருத்தியம், அபிநயனம், நேத்ர பேதம் என்ற கண் அசைவுகள், இடை அசைவுகள், கால் அசைவுகள் ஆனந்த தாண்டவம், சக்தி தாண்டவம், உமா தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சம்ஹார தாண்டவம், கை, கால்களின் அழகிய அசைவுகள் என அனைத்தும் சரிசமமாக இருவரிடமிருந்தும் வெளிப்பட்டன.
போட்டியை முடிவுக்குக் கொண்டு வர யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாக வேண்டும். போட்டியை முடிவுக்குக் கொண்டு வர சிவன் முடிவு செய்தார். தோடுடைய சிவனின் காதில் இருந்து தோட்டை விழச் செய்தார். இதனைக் கண்ட காளி சுழன்று ஆடினாள். முயலகன் மீது இருந்த வலது காலை ஊன்றி, இடது பாதம் தூக்கி ஆடும் அந்த குஞ்சிதபாதன், கால் விரலால் தோட்டைப் பற்றி, நெட்டுக்குத்தாகக் காலைத் தூக்கிக் காதில் தோட்டை அணிந்தார். இதனைக் கண்ட உக்கிர ரூபத்தில் இருந்த காளி வெட்கித் தலை குனிந்தாள். ஆடலை மறந்து அசையாமல் நின்றாள். வெட்கம் படர்ந்த கண்களுடன் இந்த தோற்றத்துடந்தான் இன்றும், சிதம்பரம் கோயிலுக்கருகே தில்லைக் காளியாகக் காட்சி அளித்துக் கோயில் கொண்டுள்ளாள். இந்நடனப் போட்டியில் தோற்றதால் ஊர் எல்லையில் கோயில் கொண்டாள். பக்தர்களுக்கு வேண்டுவனவெல்லாம் அருளுபவள் என்ற பெயரும் பெற்றாள்.
வெற்றியடைந்த சிவனுடன் சிவகாமியாகவும் காட்சி தருகிறாள். இன்றும் தில்லையம்பதியில் ஆடல் கோலத்தில் காணப்படும் நடராஜருக்குக் குஞ்சிதபாதம் என்றொரு பெயரும் உண்டு. குஞ்சிதபாதம் என்றால் தொங்கும் பாதம் என்று பொருள்.
இந்த நடராஜப் பெருமான் ஆடிய தலங்கள் ஐந்து. இவற்றை சபை எனக் குறிப்பிடுவார்கள். அவை, சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை, திருவாலங்காடு ரத்தின சபை. நடராஜருக்கு ரத்தின சபாபதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
சிவனை அபிஷேகப்ப்ரியன் என்பார்கள். சிவ ஸ்வரூபமான இந்நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகியவை அம்மாதங்கள் ஆகும். இந்த அபிஷேகங்கள், மார்கழியில் அதி காலையிலும், மாசியில் காலையிலும், சித்திரையில் உச்சிக் காலத்திலும், ஆனியில் மாலையிலும், ஆவணியில் இரண்டாம் காலத்திலும், புரட்டாசியில் அர்த்த ஜாமத்திலும் நடைபெறும்.
சிவகாமி ப்ரிய சிதம்பர நடராஜருக்கு நடத்தப்படும் ஆனி மாதத் திருமஞ்சனம் பக்தர்களுக்கு சகல செளபாக்கியத்தையும் அளிக்கவல்லது என்பது ஐதீகம்.