Published : 25 Apr 2015 04:04 PM
Last Updated : 25 Apr 2015 04:04 PM

நேபாளத்தின் இமாலய பூகம்பம்: விஞ்ஞானத் தகவல்கள் கூறுவது என்ன?

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகியுள்ளது. உயிர்பலி பெரிய அளவில் இருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்த பூகம்பத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.

இந்திய-யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்குக் காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2013 மே மாதம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிலநடுக்க ஆய்வாளர் வினோத் குமார் கவுர் அளித்த பேட்டியில் "இந்த ஃபால்ட்டில் ஏகப்பட்ட ஆற்றல் சேர்ந்திருப்பதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. அதாவது ரிக்டர் அளவுகோலில் 8 என்று பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்திற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. ஆனால் எப்போது என்றால் என்னால் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும் அல்லது மேலும் காத்திருந்து இன்னும் ஆற்றல்களைச் சேமித்துக் கொண்டு சிறிது காலம் கழித்து பயங்கர பூகம்பமாக உருவெடுக்கலாம்” என்று அப்போதே கூறியிருந்தார்.

மேலும், டிசம்பர் 2012-இல் நேச்சர் ஜியோ சயன்ஸ் இதழில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமாலயத்தில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இமாலயத்தில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல பூகம்பங்கள் நிகழ்வதுண்டு.

உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில் 1255 மற்றும் 1934ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக பூமி சுமார் 150கிமீ தூரம் வரை பிளவு கண்டது.

மேற்புறத்தை பிளவுறுத்தும் இத்தகைய நிலநடுக்கங்கள் தவிர "பிளைண்ட் த்ரஸ்ட்" என்று அழைக்கப்படும் கண்களுக்குப் புலப்படா பூகம்பங்களும் இமாலயத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இமாலயத்தில் சாத்தியமாகக்கூடிய மிகப்பெரிய பூகம்பங்களில் இது ஆரம்பமா, அல்லது முடிவா அல்லது இது தொடர்கதையா என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x