Published : 02 Mar 2015 11:03 AM
Last Updated : 02 Mar 2015 11:03 AM

பரிகாரம் என்ற பெயரில் மக்களை ஜோதிடர்கள் அச்சுறுத்தக் கூடாது: ஜோதிட மாநாட்டில் முனைவர் கே.பி.வித்யாதரன் வேண்டுகோள்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை சார்பில் அனைத்துலக வானியல், ஜோதிடவியல் மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்த இம்மாநாட்டில் ஏராளமான ஜோதிடர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

அனைவரையும் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் துறைத் தலைவர் முனைவர் ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் கூறியதாவது:

அறிவியல்போல ஜோதிடத்திலும் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும். முதலில், ஜோதிடத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் அகற்றப்பட வேண்டும். ‘பெண் மூலம் நிர்மூலம். பெண் ஆயில்யம், மாமியாருக்கு ஆகாது. பெண் விசாகம், இளைய மைத்துனருக்கு ஆகாது. பெண் கேட்டை, மூத்த மைத்துனருக்கு ஆகாது..’ என்பதுபோன்ற மூடக் கருத்துகளை அகற்றவேண்டும். இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக வாழ்வதை அனுபவத்தில் காண்கிறோம்.

ரத்தம், தாம்பத்ய வாழ்க்கைக்கு உரிய கிரகம் செவ்வாய். எனவே, செவ்வாய்க்கு செவ்வாயாக சேர்க்கும்போது பாதிப்பு ஏற்படுவதில்லை. சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ‘ராட்சதகணம்’ என்று பஞ்சாங்கத்தில் உள்ளது. அந்த பெண் அடங்காதவர் என்று ஒதுக்குகிறார்கள். இது தவறு. பெண்ணின் பிறந்த லக்னம் சந்திரனுடன் சேர்ந்த கிரகம், சந்திரனை பார்த்த கிரகம், புத்தி ஸ்தானத்தைக் கொண்டுதான் பெண்ணின் குணத்தை அளவிட வேண்டும்.

ராகுகாலம், எமகண்டம், அமாவாசையில் பிறக்கும் பிள்ளைகள் கூடுதல் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள். அவர்கள் போக்கில் விட்டு வழிநடத்துவது நல்லது. பரிகாரம் என்ற பெயரில் பொதுமக்களை ஜோதிடர்கள் பயமுறுத்தக் கூடாது. எளிய விரதங்கள், மந்திரங்களை பின்பற்றச் செய்யவேண்டும்.

இவ்வாறு முனைவர் கே.பி.வித்யாதரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x