Published : 14 Mar 2015 09:26 AM
Last Updated : 14 Mar 2015 09:26 AM

நாடாளுமன்ற துளிகள்: பிஎஸ்என்எல் தனியார்மயமில்லை

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிலளித்தனர். சில எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

ஊட்டச்சத்து

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா:

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் தினமும் சராசரியாக 2,160 கலோரிகளுக்கும் குறைவாகவே உட்கொள்கின்றனர். கிராமப்புற இந்தியாவில் தினம் உட்கொள்ளும் சராசரி கலோரியின் அளவு 2,233 ஆகவும், நகர்ப்புற சராசரி அளவு 2,206 கலோரியாகவும் உள்ளது. புரோட்டின் உட்கொள்ளும் சராசரி கிராமப்புறத்தில் 60.7 கிராம் ஆகவும், நகர்ப்புறத்தில் 60.3 கிராம் ஆகவும் உள்ளது. சராசரி கொழுப்பு உட்கொள்ளும் அளவு கிராமத்தில் 46 கிராம் ஆகவும், நகர்ப்புறத்தில் 58 கிராம் ஆகவும் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்க அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏடிஎம் கொள்ளை

நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா:

கடந்த 2014 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை ஏடிஎம்கள், பணம் கொண்டு செல்லும் வேன்கள், வங்கிகள், வங்கி மற்றும் ஏடிஎம்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஆகியோரிடமிருந்து ரூ.23.59 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் 297 வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பெரும் பரப்புடைய தேசம் என்பதால் இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்க முடியாது. எனினும், பாதுகாப்புத் துறையினர் அதிகபட்ச விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிஎஸ்என்எல் தனியார்மயமில்லை

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிய போதும் அவற்றைத் தனியார் மயமாக்கும் திட்டம் அரசிடம் இல்லை. இந்நிறுவனங்களின் நிதிநிலைமை நன்றாக இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதுதொடர்பாக அவையில் விரிவான விவாதம் நடத்த விரும்புகிறேன். அந்நிறுவனங்களை மீண்டும் லாபத்தில் இயங்கச் செய்வதற்கான முனைப்பில் அரசு உள்ளது. இந்நிறுவனங்களின் செல்போன் சேவையை மேம்படுத்த புதிதாக 25,000 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி 97.9 கோடியாக உள்ளது. இது விரைவில் 100 கோடியாக உயரும்.

வலதுசாரி வன்முறை

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா:

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது வலதுசாரி தீவிரவாதிகள் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஊடகத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வலதுசாரி தீவிரவாதிகள் பெரும் ஆக்ரோஷமாக மாறிவருகின்றனர். ஓர் எழுத்தாளர் மீது நிர்பந்தம் ஏற்படுத்தி அவர் இனிமேல் எழுதமாட்டேன் எனச் சொல்ல வைத்துள்ளனர். இவை கண்டிக்கப்பட வேண்டும்.

வரைபடத்தால் சர்ச்சை

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்:

அனைத்து இந்தியர்களுக்கும் ஜம்மு காஷ்மீர் கிரீடமாக விளங்குகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் இதழில் ஜம்மு காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தான் பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது ஆர்எஸ்எஸ் பாஜக அரசு என்று குலாம் நபி ஆசாத் கூறியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிக்கும்போது, “அந்த வரைபடம் நாங்கள் விசாரிக்கிறோம். இது அரசின் கருத்தோ அல்லது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்தோ அல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x