Published : 07 Feb 2015 10:59 AM
Last Updated : 07 Feb 2015 10:59 AM

பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் தொடரும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகம்

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்தார்.

செலவுகள் செய்வதில் சிக்கனம் இருக்கும் என்றும், அதிகமாகக் கடன் வாங்கி செலவு செய்வதை அரசாங்கம் விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு செலவினங்களில் சீர்திருத்தம் செய்யப்படும். இப்போது நாம் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதால், வருங்கால தலைமுறையை கடனில் தள்ளுகிறோம். இப்போது நாம் செய்யும் செலவு புத்தி கூர்மையுள்ள செயல் கிடையாது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

நிலையான வரி

அதேபோல வரும் பட்ஜெட்டில் நிலையான வரி விகிதம் இருக்கும் என்றும் அவர் கூறினார். மத்திய மாநில அரசுகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முறையற்ற வரி விதிப்பு இருக்காது.

வரிவிதிப்பு முறைகளில் இருக் கும் அசாதாரணமான சூழலை எளிதாக்கும் நடவடிக்கையை மத் திய அரசு கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறது.

வரி நிச்சயமாகக் கட்ட வேண்டும், வரியைக் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது, ஆனால் மாநில அரசுகள் செய்யும் முறையற்ற வரி விதிப்பினால் முத லீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

சமீபத்தில் வோடபோன் நிறுவனத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மின் துறையில் சீர்திருத்தம்

வரும் பட்ஜெட்டில் மின் துறை, எரிசக்தி, ரயில் போக்குவரத்து மற்றும் துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தம் தொடரும் என்றும், இந்த துறையில் அரசாங்கத்தின் முதலீடு இருக்கும் என்றும் கூறினார்.

முக்கிய தொழிலதிபர்களுடன் நடந்த வீடியோ கான்பிரன்ஸ் முறையில் பேசும் போது இவ்வாறு கூறினார். ஏற்கெனவே நிர்ணயம் செய்துள்ளபடி நிதிப்பற்றாகுறை 4.1 சதவீதத்துக்குள் குறைக்கப் படும். இதற்காக செலவுகள் குறைக்கப்படும்.

நிதியமைச்சராக பொறுப்பேற்ற வுடன் 10 சதவீத திட்டச்செலவுகளை குறைத்தார் ஜேட்லி. வரி வருமானம் திட்டமிட்ட இலக்கை அடையவில்லை என்பதால், செலவு குறைப்பு நடவடிக்கைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர பொதுத்துறை நிறுவனங் களில் பங்கு விலக்கல் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் இன்னும் 50 சதவீதத்தைக் கூட தொடவில்லை.

கட்டுமானத் திட்டங்கள்

சர்வதேச நிறுவனங்கள் கட்டுமானத்துறையில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். அரசாங்கம் இந்த முதலீடுகளை பரிசீலித்து வருகிறது என்றார்.

கட்டுமானத்துறையின் மேம்பாடு பொதுமக்களின் செலவு மற்றும் உள்நாட்டு சேமிப்பு மூலம் இருக்க வேண்டும் என்றார்.

முக்கியமான கட்டுமானத் திட்டங்களுக்கு மத்திய அரசு எப்படிப்பட்ட நிதியை எதிர்பார்க்கிறது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

இந்த சந்திப்பில் மகாராஷ்ட்ரா முதல் தேவேந்திர பட்னவிஸ், டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி, ஏடிஏஜி குழுமத்தலைவர் அனில் அம்பானி, ஆக்ஸிஸ் வங்கி தலைவர் ஷிகா ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x