Published : 17 Feb 2015 05:16 PM
Last Updated : 17 Feb 2015 05:16 PM

சட்டம் - ஒழுங்கை ஆளுநர் உரையில் பாராட்டுவது வேதனை: வைகோ

'மீத்தேன் திட்டம் ரத்து செய்யாதது, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்காதது, மதுக்கடைகள் மூடாமல் இருப்பது, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படாதது என எதையும் குறிப்பிடாத ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிடத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இது வரவேற்கத்தக்கது எனினும், இலங்கை வடக்கு மாகாணசபை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை ஆதரித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முன்வராதது ஏமாற்றம் அளிக்கின்றது.

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும், மத்திய அரசு உடனடியாக அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பதும் வரவேற்கத்தக்கது. காவிரி பாசனப்பகுதிகளில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், தமிழக அரசு இதுகுறித்து ஆளுநர் உரையில் திட்டவட்டமான அறிவிப்பு வெளியிடாதது மிகுந்த கவலை அளிக்கின்றது.

தமிழ்நாட்டில் நாள்தோறும் நடக்கும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள் பற்றியெல்லாம் மக்கள் கவலையுடன் பீதியில் உறைந்து கிடக்கின்றபோது, சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் பாராட்டு தெரிவித்து இருப்பது வேதனை தருகிறது.

தமிழகத்தைச் சீரழித்துவரும் மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் குறிப்பாகத் தாய்மார்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு இக்கோரிக்கையை அலட்சியப்படுத்தி இருக்கின்றது.

நடப்பு ஆண்டில் 110 டன் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ள அதிமுக அரசு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சிக்காக பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கவில்லை. கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ 3500 ஆகவும், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ 2500 ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்; கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் நிலுவையில் உள்ள தொகையை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் போன்றவை குறித்து ஆளுநர் உரையில், எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மூன்று ஆண்டுகளில் மின் உற்பத்தி மூன்றாயிரம் மெகாவாட் அதிகரித்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லை. மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததும், பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யாததும் மக்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டங்கள் மூலம் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது என்றாலும், இதற்கான நிதி உதவியை மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று பயனாளிகள் வைத்த கோரிக்கை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றம் தருகிறது.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது என்றும் அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், திருபெரும்புதூரில் மூடப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகளில் வேலை வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடாதது கவலை அளிக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் உரையில் இவை பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ஆயிரம் அரசுப் பள்ளிகள், போதிய மாணவர் சேர்க்கை இல்லாததாலும், அடிப்படை கட்டுமான வசதிகள் இன்றியும் மூடப்பட்டு இருக்கின்றன. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்பது வெறும் அறிவிப்புடன் நின்றுவிடக் கூடாது.

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வேலை என்பது குறைந்தது மட்டுமின்றி மொத்தம் உள்ள 385 ஒன்றியங்களில் 98 ஒன்றியங்களில் மட்டுமே ஊரக வேலை திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளது முரணாக உள்ளது'' என்று வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x