Published : 08 Feb 2015 02:32 PM
Last Updated : 08 Feb 2015 02:32 PM

விவாதக் களம்: ஆடை மட்டுமே பெண்ணின் அடையாளமல்ல

எங்கேயும் எப்போதும் பெண்களைத் துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பிப்ரவரி 01 தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கருத்தை ஆதரித்தும் மறுத்தும் வாசகர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்துவிட்டன. அவற்றில் இருந்து சில இங்கே உங்கள் பார்வைக்கு.

ஆடை என்பது உடலை மூடி, கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்தவா? அல்லது காமக் கண்களுக்கு விருந்தளிக்கவா ? மிஷேலின் கணவர் ஒபாமா கோட், சூட் அணிந்து முழுதாக உடலை மூடி அழகாகத்தானே காட்சியளிக்கிறார்?

- மன்சூர் அஹமத். அ, மதுரை அண்ணாநகர்.

இங்கு உரிமை என்பதற்கு ஒரு வரையறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. உரிமை என்பது சுய ஒழுங்குகளையும் கண்ணியத்தையும் பாழ்படுத்துவதாக இருத்தல் கூடாது. அவ்வகையில் உள்ளவை எவ்வளவு பெரிய உரிமையாக இருந்தாலுமே அது ஒழிக்கப்பட வேண்டும். ஒபாமாவின் மனைவிக்கு சவுதி அரேபியா சென்ற சமயத்திலும், இந்தோனேசியாவில் பள்ளிக்குள் சென்ற சமயத்திலும் ஆடைக் கட்டுப்பாடு விதித்தது வரவேற்கத்தக்கதே.

- அகமது ஃபக்ருதீன், சென்னை.

ஆடைக் குறைப்பு அல்லது துறப்பது என்பதுதான் சுதந்திரம் என்று கருதுகிறீர்களா? ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்தால் அதை புரொஃபஷனல் என்று உயர்த்தும் சமுதாயத்தில், பெண்கள் விஷயத்தில் மட்டும் ஆடையைக் குறைப்பதுதான் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பெண்களையும், பெண்களின் உடலையும் வியாபார, விளம்பரக் காட்சிப்பொருளாக இந்த உலகம் மாற்றுகிறது. இது அடிமைத்தனம் என்று பெண்களுக்கும் புரிவதில்லை.

- தீ. முஹம்மது அத்தாஉல்லாஹ், தி நகர், சென்னை.

பெண்களைத் துரத்திக்கொண்டே இருக்கும் ஆடைக் கட்டுப்பாடு என்பது பிற்போக்குத்தனமானது. ஆடை விஷயத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும் . ஆனால் உலகில் ஆண், பெண் இனக்கவா்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இதுதான் இயற்கை, விஞ்ஞானம். உலகில் அனைத்து ஜீவராசிகளும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்ப் பாலினத்தை ஈா்ப்பதற்கு இயற்கையே உந்துகிறது. மனித குலத்தைப் பொறுத்தவரை, பகுத்தறியும் தன்மை உடையவா்கள் என்பதால் நாகரிகமாய் உடை அணிதல் நலம். எதிர்ப் பாலினத்தைக் கிளா்ந்தெழச் செய்யும் வகையில் அல்லாமல், நாகரிகமாய் உடையணிதல் இன்றைய தேவை. இந்தச் சமூகம் பெண்களின் பால் உள்ள கருத்தை மாற்ற நீண்ட நாள் ஆகும்.

- என். கோவிந்தராஜ்

ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதில் ஆடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாலைவனங்கள் நிறைந்த அரபு நாடுகளில் மணல், தூசு கலந்து வீசுகின்ற காற்றில் இருந்து ஆண்களும் பெண்களும் தம்மைக் காத்துக் கொள்ளவதற்காகவே முழு நீள உடைகளை அணியும் பழக்கம் இருந்தாலும்கூட அதுவே அந்நாட்டின் பாரம்பரியம். மிஷேலும் அதைப் பின்பற்றி இருந்தால் அது அவருக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கும். ஆடையில் சுதந்திரம் என்பது ஒரு பெண்ணுக்கு ஆபத்தாகத்தான் முடியும். எனவே ஆடைக் கட்டுப்பாடு பெண்களின் கண்ணியத்தைக் காக்குமே தவிர சுதந்திரத்தைப் பறிக்காது.

- மு.க.இப்ராஹிம், வேம்பார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உடலை மறைத்து பல பெண்களையும், நவநாகரிக ஆடையுடன் பல பெண்களையும் நடக்கவிட்டுப் பரிசோதனை நடத்தினார்கள். அதில் அரைகுறை ஆடையுடன் நடந்த பெண்களில் 95% பேர் ஆண்களால் பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாயினர். உடலை மறைத்துச் சென்ற பெண்களை யாரும் நெருங்கக்கூட இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று அந்த நிறுவனம் அறிவுரையும் தருகிறது. உடலை மறைப்பது பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடை என்றால் உலக அளவில் சமூக சேவைக்கான நோபல் பரிசைப் பெற்ற அன்னை தெரசாவுக்கு மட்டும் எப்படி அது சாத்தியம்? அவரது ஆடை அவரின் சுதந்திரமான சேவைக்குத் தடையாக இல்லையே!

- ஹபிபுல்லா.

மனிதர்களின் மனம் குரங்கு போன்றது. அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் அவளைக் காம இச்சையோடு பார்க்கும் ஆண்கள் வாழக்கூடிய உலகம் இது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தாலும் ஒரு நொடியேனும் மனதை அலைபாயவிடாத ஆண்கள் இந்த உலகில் கிடையாது. நீங்கள் சில ஆண்களை நினைவுகூர்ந்து சொல்லக்கூடும், ஆனால் அவர்கள் ஆசையை அடக்கியவர்களே தவிர ஆசைப்படாதவர்களாக இருந்திருக்க முடியாது.

- ஜியாத் ரஹிமான், தக்கலை, கன்னியாகுமரி.

ஆடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம். இதற்கு பெண் மட்டும் விதிவிலக்கல்ல. பெண்கள் எந்த வகையான ஆடை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால், அது பார்ப்பவர்களுக்கு ஆபாசமாகத் தெரியக் கூடாது. தற்போது பெண்கள் அனைத்துத் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆகையால், அவர்கள் இடத்திற்கேற்ப, விருப்பத்திற்கேற்ப உடை உடுத்துவதே சரியானது.

- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர், தேனி மாவட்டம்.

சவுதியில் ஆண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அந்நாட்டுக்குச் செல்வோர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுதான் நியதி. அவ்வாறு பின்பற்ற மாட்டோம் என்று நினைப்பவர்கள் அந்நாடுகளுக்குச் செல்லாமல் இருந்து கொள்ளலாம். ஆடைக் கட்டுப்பாடு என்பது சவுதியில் மட்டும் இருப்பதல்ல. தமிழகத்தில் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் கண்ணியமான உடைகளை அணிந்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன. ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- ரியாஸ் அஹ்மது.

பேச்சும் ஒரு சுதந்திரம்தான். அந்தப் பேச்சுக்கும் எல்லை வகுத்துதானே வைத்திருக்கிறோம். முகம் மற்றும் கைவிரல்கள் மட்டும் தெரியும்படி ஒபாமா உடையணிந்திருக்கிறார். அதேதான் மிஷேலுக்கும்.

இரண்டு பேரும் ஒரே அளவுதான் உடலை மறைத்து உள்ளார்கள். பிறகு ஏன் பெண்கள் மட்டும் உடலின் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? வீட்டை விட்டு ஆணோ பெண்ணோ வீதிக்கு வந்து விட்டால் இந்த அளவுக்கு உடலை மறைக்க வேண்டும் என்பது அந்த நாட்டுச் சட்டம். ஒரு நாட்டுச் சட்டத்தை மீறுவதுதான் பெண் உரிமையா?

முகமது ஹியத்துல்லா, முத்துப்பேட்டை.

பெண்களை அடக்க வேண்டும் என்ற பிற்போக்குத் தனம்தான் தெரிகிறதே தவிர வேறு எந்த முன்னேற்றத்துக்கான அறிகுறியும் தென்படவில்லை. இந்தப் போக்குக்கு அடிப்படைக் காரணம் பயம். பெண்களைக் கண்டு பயம். எங்கே அவர்கள் தங்களைவிட முன்னேறிவிடுவார்களோ என்ற பயம். அதைவிடப் பெண்களை அடக்குவதற்கு வேறு பொருள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அதீத பயம். பொய்க்கால் குதிரையில் பயணிக்க நினைக்கும் இத்தகையோர் எத்தனை தூரம் பயணித்துவிட முடியும்?

- ஜே .லூர்து, மதுரை.

ஆடை மனிதனின் மானத்தை மறைக்கத்தானே தவிர அடிமைத்தனத்தை, சுதந்திரத்தைக் கட்டுபடுத்த அல்ல. ஆண்களைவிடப் பெண்கள் உடல்ரீதியாக மாறுபட்டவர்கள் என்கிறபோது, ஆடைக் கட்டுப்பாடு தவறு என்று சொல்ல முடியுமா? அரை நிர்வாணம்தான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை பெண்களுக்கு வேதனைதான் தரும்.

- மோஹிதஸ்

ஆடைக் கட்டுப்பாடு அவசியம் தேவை. நம் பாரம்பரிய உடைகள் வேட்டியும், புடவையும்தான். ஆனால் மேற்கத்திய உடைகள் ஊடுருவியதால் நம் கலாச்சாரம் மறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. இப்போதும் சில கோயில்களில் ஆண்கள் மேல் சட்டை, லுங்கி அணிந்து வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆண்கள் கோயிலுக்குச் செல்வதில்லையா ? அதே மாதிரி, சவுதி அரேபியாவும் அவர்கள் நாட்டுக் கலாச்சாரத்தை மற்றவர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக நம் கலாச்சாரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று எண்ணக் கூடாது.

- என். உஷா தேவி, மதுரை.

பெண் தன் உடல் தெரியும் வண்ணம் ஆடை அணிவது அவளது தனிப்பட்ட விருப்பம்தான். எனினும் அவளின் அந்த உடலை பல ஜோடிக் கண்கள் ரசிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உடலை மறைத்து உடை அணிய வேண்டும் என்பது பிற்போக்கான எண்ணமே இல்லை. ஆணின் மனநிலை கவர்ச்சியாக உடையணியும் பெண்ணைச் சற்று ஆபாசமாகத்தான் பார்க்கும். கண்ணியமாக உடையணிபவளைக் கண்ணியமாகத்தான் பார்க்கும். இயற்கையாகவே ஆண், பெண்ணை இச்சையோடுதான் பார்க்கும்படி படைக்கப்பட்டான். இது தெரிந்தால் எந்தப் பெண்ணும் கண்ணியமாக உடுத்துவாள்.

- எஸ். ஜெஸிலெட், ஆலங்குளம், திருநெல்வேலி.

கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கும் ஆடைகளில்தான் எத்தனை, எத்தனை வித்தியாசங்கள். அவரவர் ரசனைக்கு ஏற்ப ஆடை அணிவதில்கூட எத்தனை கட்டுப்பாடுகள். அதிலும் பெண்கள் அணியும் உடைகளுக்குத்தான் எத்தனை சர்ச்சைகள்? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு ஆண்களும் காரணம் என்பதை மறந்து, பெண்களின் ஆடையை ஒரு காரணமாகக் கூறுவது தவறு.

- பானு பெரியதம்பி, சேலம்.

இன்று சமுதாயத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் பொது இடங்களில் காணப்படும் சில சுவரொட்டிகள், சில நாளிதழ்கள், வார இதழ்கள் முதல் சினிமா, தொலைக்காட்சி வரையுள்ள அனைத்து விளம்பரங்கள், கதை, கட்டுரைகளில் காணப்படும் ஆடை குறைவான பெண்களின் காட்சிகளே. சினிமாவின் பாடல் காட்சிகளாகட்டும், விளம்பரமாகட்டும்.. ஆண்கள் முழுமையான சூட், கோட்டுடனும், பெண்கள் கவர்ச்சியான அரைகுறை ஆடையுடனும் காட்டப்படுவது ஏன்? “பெண்களைக் கண்டால் கண்களைத் தாழ்த்துங்கள், காரணம், முதல் பார்வை உங்களுடையது; அடுத்த பார்வை சாத்தானுடையது” என்கிறது ஓர் அருமையான நபிமொழி. கண்ணியமிக்க ஆடையை உடுத்திக் கொண்டு சவுதி அரேபியாவின் ஆண்கள் பெண்கள் மட்டுமல்ல, உலகத்தில் வாழும் எந்தக் குடிமகனும் உலகின் எப்பகுதிக்கும் போகலாம்.

- பேராசிரியர் டாக்டர் எஸ். கே. ஹயாத் பாஷா.

பலர் மேற்கத்திய ஆடைக் கலாச்சாரத்தைப் பெருமையாக நினைக்கிறார்கள். பாலியல் சார்ந்த்த குற்றங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா. இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆனால் சவுதி அரேபியாவில் 0.0046% தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதனால் அமெரிக்கப் பெண்களும் சவுதி அரேபியப் பெண்களும் ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்ற கருத்து சரியானதல்ல.

- முஹம்மது ஷவ்க்கத்.

அமெரிக்காவின் முதல் பெண்மணிக்கே சவுதி அரேபியாவில் இந்த நிலை என்றால், அந்த மதத்தினர் இன்னும் பழமைவாதிகளாக இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது என்றுதானே அர்த்தம்? உடை மற்றும் ஆடைகள் நமது அங்கங்களை மறைக்கத்தான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. நமது இந்தியப் பராம்பரிய ஆடைகள்கூட இந்த நம்பிக்கையைத்தான் ஏற்படுத்துகின்றன. உடை மற்றும் ஆடைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும்போது, அந்த நாட்டினரின் கலாச்சாரத்தை மதிப்பதுதானே பண்பு?

- ஜீவன். பி.கே, கும்பகோணம்.

தனி மனித சுதந்திரம் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில்தான் பெண்களை வெளித் தோற்றத்தால் கட்டுப்படுத்தும் அவலங்களும் நிகழ்கின்றன. பெண் வெறும் உடலாக மட்டுமே பொதுவெளியில் வைக்கப்படும் நிலை நாகரிகச் சமூகத்தின் பழங்குடி மனநிலையையே காட்டுகிறது. ஊடகங்களும் விளம்பரங்களும் பெண்களை அழகுசாதனப் பொருட்களின் நுகர்வோராகவே காட்டுகின்றன. இதில் யதார்த்தம் என்னவென்றால் பெண்களுமே இத்தகைய மாயையிலேயே நிலைத்து ஆடைகள் மட்டுமே தங்களை வெளிப்படுத்தும் என்று மயங்குவதே.

பெண்ணின் அத்தனை திறன்களையும், அறிவையும் கீழாக நினைக்க வைக்கும் இத்தகைய நிகழ்வுகள் கடும் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆடை என்பது பெண்களின் உணர்வுகளைக்கூட அடக்கும் தடையாக மாறக் கூடாது. அழகுணர்வு என்பது இயற்கையாக பெண்ணின் இயல்பு. அதனைக் கலாச்சார அடையாளமாக, பண்பாட்டின் வெளிப்பாடாக உருவகித்துப் பெண்களை அடக்குவது ஒருபோதும் ஏற்புடையதன்று.

- மோனிகா மாறன், வேலூர்.

பெண்களை அதிகமாக ஆடை அணியச் செய்து அவர்களின் உடலை மூடச்சொல்வது பெண் சுதந்திரத்தில் குறுக்கிடுவது என்று முழங்கும் பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்வோரும், பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் சினிமா, மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதும் சாயம் பூசி மறைப்பதும் ஏன்? இதையும் அந்த சினிமாவில் நடித்த நடிகையின் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?

நமது நாட்டில் பெண்களும் படித்து, ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்க வர்க்கத்தினரால் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. பாலியல் சுரண்டலுக்கு, வன்முறைக்கு எளிதாக ஆளாகிறார்கள். பெண் சுதந்திரம் என்று போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணுரிமைவாதிகளும், இயக்கங்களும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துக்காகப் போராடவேண்டும். இதன் மூலம்தான் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியும். உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.

- இக்பால் கான், மணலிக்கரை.

உங்களுக்காக உண்ணுங்கள், அடுத்தவருக்காக உடுத்துங்கள் என்பார் பெஞ்சமின் பிராங்க்ளின். மிஷேலின் செயல்பாடு, இந்த நவநாகரிக உலகத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, நாங்கள் தொடர்ந்து பழைமைவாதிகளாகவே எண்ணெய்க் கிணறுகளுக்குள்ளேதான் வாழ்க்கையை ஓட்டுவோம் என்பது போல் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாடும் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவை சார்ந்த ‘கட்டாய விதி’களுக்குட்பட்டே இயங்கி வருகின்றன. எந்த நாட்டுப் பெண்ணானாலும் அணியும் ஆடைகள் விஷயத்தில், எது கௌரவமோ அதனை அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்கிற விசாலமான பார்வை, குறிப்பாக ஆண்களுக்கு வேண்டும் .

- சந்திரா மனோகரன் , ஈரோடு .

மிஷெல் ஒபாமா, தனக்கு ஆடை வடிவமைத்துத் தருவதற்காகத் தனி ஃபேஷன் டிசைனரை நியமித்திருக்கிறார். எந்த நாட்டுக்கு மிஷேல் சென்றாலும் அந்த நாட்டின் பாரம்பரியத்திற்கேற்ப அவருக்கான உடைகளைத் தயார் செய்வார்கள். அப்படித்தான் சவுதி அரேபியாவிற்கு மிஷெல் சென்றபோது ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட ஆடையைத்தான் உடுத்தியிருப்பார். இதில் சவுதி அரேபியா வற்புறுத்தியது என்பதற்காகத் தனது ஆடைகளை மாற்றி அணிந்துள்ளார் என்ற வாதமே உண்மையானதா? சவுதி அரேபியாவில் அவர் அணிந்திருந்த உடை அசௌகரியமாக இருந்திருப்பதால் அவர் இயல்பாக இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது அவரது இயல்பின்மைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.

மிஷெல் ஒபாமா சொன்னால் ஒழிய யாராலும் சரியான காரணத்தைக் கூற முடியாது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

மரியாதை நிமித்தமாக ஒருவருக்குக் கை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம். கை கொடுத்துத்தான் வரவேற்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா? சவூதி பெண்கள் அமெரிக்கா சென்றால் அரைகுறை ஆடை அணிவார்களா என்பது நாகரிகமற்ற கேள்வி.

ஒரு நாட்டில் பின்பற்றப்படும் உடை சரியில்லை என்று இன்னொரு நாடு நினைத்தால் அந்த நாட்டையே, அதன் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே அவமதிப்பதாகாதா என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படி என்றால் சவுதியில் பின்பற்றப்படும் உடைக் கலாச்சாரத்தைப் பிற்போக்குத்தனம் என்று கூறுவது ஒட்டுமொத்த சவுதியையே அவமதிப்பதாக ஆகாதா?

- அபுல் ஹசன்.

பெண்களின் ஆடைகள் பேசப்படும் அளவுக்கு அவர்களின் திறமைகள் பேசப்படுவதில்லை. பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட ஒரு நாட்டுக்குத் தனது இயல்பான உடைகளை விடுத்து முழுக்கப் போர்த்திக் கொண்டு மிஷேல் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கார்ஃ ப் அணிவதைத் தவிர்த்த மிஷேல், தனது வழக்கமான மேற்கத்திய பாணி உடையிலேயே சென்றிருக்கலாம். அல்லது தனது அரேபியப் பயணத்தைத் தவிர்த்திருக்கலாம். பெண்களின் உடல் முழுதும் மூடி, தலையையும் போர்த்தி அணியும் உடை மூலம் எத்தகைய மாற்றத்தைச் சமுதாயத்தில் கொண்டுவர முடியும்?

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

ஊருடன் இணைந்து வாழ்வதுதான் நல்லது. எல்லோரும் எப்படி உடையணிந்து இருக்கிறார்களோ அப்படித்தான் நாமும் உடையணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகாமல் இருக்கலாம். பெண்களின் ஆடை குறித்துக் குறை சொல்வது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேதனை தரும் செய்தி. செல்லும் இடத்துக்குத் தகுந்தாற்போல் உடையணிவதுதான் நம்மையும் நம் தகுதியினையும் காப்பாற்ற உதவும் சரியான வழி.

- உஷாமுத்துராமன், திருநகர்

இயற்கையில் ஆணுக்குப் பெண்ணுடல் மீதும், பெண்ணுக்கு ஆண் உடல் மீதும் ஒருவிதமான தன்னை மறந்த ஈர்ப்பு இருக்கிறது. இதை அறிவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் புரிந்துகொண்டும், உணர்ந்துகொண்டும் ஆடைகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

- ஆர். திருமூர்த்தி.

ஆண் துனையின்றி வெளியே செல்லக் கூடாது, கார் ஓட்டக் கூடாது, பேண்ட் அணியக் கூடாது, படிக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லும் முஸ்லிம் நாடுகளில் பெண்கள் போராட்டங்களை நடத்தி வருவது உங்களுக்குத் தெரியவில்லையா? உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துச் செயல்பட்டால் இதுபோன்ற விஷயங்களுக்கு நாம்தான் முதலில் குரல் கொடுப்போம். பிற்போக்குச் சிந்தனைகள் நம்மை ஒருபோதும் முன்னேற்றாது.

மதத்தின் பெயரால் பெண்களை ஒடுக்க நினைத்தால் அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, இந்து, கிறித்துவம், யூதம், சீக்கியம் என்று எந்த மதமாக இருந்தாலும் சரி எதிர்க்க வேண்டியது அவசியம்.

- சித்தி சுபைதா பேகம், சென்னை-92.

பெண்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக ஆடையைப் பயன்படுத்தும் நடைமுறை உலகம் முழுவதும் வியாபித்திருப்பது வேதனை. நம்ம ஊர் பெண்கள் நவநாகரிக ஆடைக்கு மாறினால் நெருக்கப்படுகிறார்கள் என்றால், உலகின் அதிகாரமிக்க அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேலும் இந்த நெருக்குதலுக்குத் தப்பவில்லை என்பதைப் பார்க்கும்போது உலகமெங்கும் பெண் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறாள் என்பது உறுதியாகிறது. கவர்ச்சி உடையணிந்து செல்லும்போது மட்டுமல்ல, பாரம்பரிய உடையணிந்து செல்லும்போதும் பெண் கண்டனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகிறாள். கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்பதை மறந்து, அது பெண்ணுக்கான அடையாளம் என எண்ணும் பிற்போக்கு எண்ணமே பெண்ணை ஒவ்வொரு விஷயத்திலும் குறைகாண முற்படுகிறது.

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

நம் சமுதாயத்தில் ஆண் உயர்வு பெண் தாழ்வு என்கிற மூடநம்பிக்கை பல்லாண்டு காலமாக வேர் விட்டு வளர்ந்துள்ளது. இந்த வேற்றுமைதான் சமுதாய வளர்ச்சிக்குத் தடைக்கல்லாய் இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் பெண்களின் உடையைப் பற்றிய விமர்சனங்கள். ஆடு மேய்ப்பவர் அரைப் பாவாடை அணிந்தாலும் பிரச்சினை, அதிபரின் மனைவி முழு உடை அணிந்தாலும் பிரச்சினை என்றால் பெண்கள் வேறு எப்படித்தான் உடை அணிவது?

- இராஜபுஷ்பா, கும்பகோணம்.

இன்று நாகரிகம், நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் படும் பாட்டை எடுத்துச்சொல்வோர் யார்? எந்தப் பொருளையும் விளம்பரப்படுத்த பெண்களை ஏன் அரைகுறை ஆடைகளுடன் காட்ட வேண்டும்? சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களில் தொன்னூறு சதவிகித விளம்பரங்கள் பெண்களின் உடம்பைக்காட்டித்தானே வருகின்றன. இவைதான் பெண்கள் பெற்ற முன்னேற்றமா? ஆண்கள் பார்த்து ரசிக்கும் பொருளா பெண்கள்? சிந்திக்க வேண்டாமா?

- எஸ்.நஸ்ரின் பாத்திமா, சென்னை.

ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட முற்படும்போது அவளை அடக்கியாள ஆண்கள் கையாளும் உத்திதான் ஆடைக் கட்டுப்பாடு. பெண்களின் மீதான அடக்குமுறை பெரும்பாலும் சாதியையும் மதத்தையும் முன்னிறுத்திப் பிடிக்கும் சமூகத்திலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவை ஒரு மதவாத நாடாக மாற்றும் முயற்சியில் நமது மத்திய அரசு முனைப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் பெண்கள் மீதான கட்டுப்பாடும் அடக்குமுறையும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

- வெண்மணி மாணிக்கம், கிருஷ்ணகிரி.

எடை குறைந்தால் ரேஷன், உடை குறைந்தால் ஃபேஷன் என்றிருப்பதால்தான் பெண்கள், ஆண்களால் பலவிதமான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். ஆண், பெண்ணின் உடலமைப்பு வேறு. பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை அணிவதுதான் அவளுக்கு நல்லது.

- சுமையா மஹ்மூதியா, தென்காசி.

பெண்கள் ஆடை அணிவதில் அவர்களுக்குப் பாதுகாப்பானதும் வசதியானதுமாக உணரும் மாற்றங்களைச் செய்துகொள்வதில் சமூகமோ சாதி, மத அமைப்புகளோ கட்டுப்பாடு விதிப்பது தவறானது.

- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.

பெண்ணோ, ஆணோ உடை விஷத்தில் ஒருவரைக் கட்டுப்படுத்துவது தவறாகும். நம் ஊரில் துக்க வீடுகளுக்கு கறுப்பு, வெள்ளை உடையணிவர். அது கட்டுப்பாடு இல்லை. விருப்பம்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

ஈ.வெ.ரா. பெரியார், பெண்கள் அனைவரும் `கிராப்’ வைத்துக் கொண்டு, முழுக்கால் சட்டை அணியச் சொல்லி, ஆண், பெண் பேதங்களைக் களையச் சொன்னார். பணிச் சூழல், தட்பவெப்பம், பொருளாதாரம் போன்ற சூழலுக்கேற்றவாறு பெண்கள் தங்களுக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உடையவர்கள்.

- கு. ரவிச்சந்திரன், ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x