Published : 23 Feb 2015 10:21 AM
Last Updated : 23 Feb 2015 10:21 AM

மத நல்லிணக்க மயானம்: திருச்சி அருகே ஒரு முன்மாதிரி கிராமம்

திருச்சியை அடுத்த மேலவாளாடி-தெற்கு சத்திரம் கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினர் நல்லது, கெட்டது உட்பட எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அனைவருக்குள்ளும் பகிர்ந்துகொள்வதை வழக்கமா கக் கொண்டுள்ளனர். இப்படி மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட் டாக விளங்கும் இந்த கிராமத்தில் 3 மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் ஒரே இடத்தில் மயானம் இருக்கிறது.

இந்த சமத்துவ மயானத்தின் முன் கேட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் அடையாளச் சின்னங்களைப் பொறித்துள்ளனர். இந்த கேட் பூட்டைத் திறப்பதற் கான சாவி 3 மதங்களின் முக்கிய பிரமுகர்களிடம் உள்ளது.

ஒரே ஒரு பொது வழியைக் கொண்ட இந்த மயானத்தில் முதலில் கிறிஸ்த வர்களின் கல்லறை, அடுத்து முஸ்லிம்களுக்கான அடக்கத் தலம், அடுத்ததாக இந்துக்களுக் கான தகனமேடை உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் சாலை மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். மயானம் பராமரிப்புக்கான செலவை 3 மதத்தினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

நான்கைந்து தலைமுறைகளைக் கடந்தும் தொடரும் இந்த மதநல் லிணக்க செயல்பாடு குறித்து மணி என்பவர் ‘தி இந்து’விடம் கூறும் போது, “என் பாட்டனார் காலத்தில் இருந்தே எங்கள் கிராமத் தில் ஒரே மயானம்தான். எங்கள் சமூகத்தில் சிலர் கிறிஸ்தவர்களாக மாறியபோது அவர்களுக்கென கல்லறைத் தோட்டத்தை மயானத் துக்கு அருகில் உருவாக்கிக் கொடுத்தனர். முஸ்லிம்கள் 2 மைல் தொலைவில் உள்ள தாளக்குடியில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த நிலையில், 1960-ம் ஆண்டு அவர்களும் இங்கிருக்கும் கல்ல றைக்கு அருகே இருந்த இடத் தில் தங்களுக்கென புதைக்கும் இடத்தை அமைத்துக்கொண் டனர்.

அன்று முதல் இன்று வரை இந்த இடம் மதநல்லிணக்க மயானமாக மாறிவிட்டது” என்றார்.

யாகூப் என்பவர் கூறும்போது, “இங்கு 92 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. கிராமத்தைப் பொறுத்த வரை சாதி, மத வேறுபாடு என என் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. ஊரில் எந்த ஒரு நல்லது, கெட்டது என்றாலும் 3 மதத்தினரையும் ஒன்றாக அங்கு பார்க்கலாம். மத ஒற்றுமையை சொல்லி கொடுத்துதான் எங்கள் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.

பிடித்த மதத்தைப் பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால், அதை மற்றவர்களிடம் திணிக்காமல் இருந்தாலே பிரச்சினைக்கு வாய்ப்பில்லை.

வழிபாடு முதல் சுடுகாடு வரை நாங்கள் ஒற்றுமையைப் பின்பற்றுவதால் எங்களுக்குள் மத வேறுபாடில்லை” என்றார்.

“மணியும், யாகூப்பும் கூறுவது ரொம்பச் சரி” என்கிறார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சவேரியார்.

நாடு முழுவதும் சாதி, மத மோதல்கள் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறிவரும் வேளை யில், சத்தமே இல்லாமல் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வும், மதநல்லிணக் கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் மேலவாளாடி தெற்கு சத்திரம் கிராமம் விளங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x