Last Updated : 01 Feb, 2015 04:41 PM

 

Published : 01 Feb 2015 04:41 PM
Last Updated : 01 Feb 2015 04:41 PM

பிரதமர் மோடி மே மாதம் சீனா பயணம்: இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும்- வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சீனா செல்கிறார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக கடந்த 31-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சுஷ்மா சென்றார். நேற்று சீன-இந்திய ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதில் இரு நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். சீன தகவல் துறை இயக்குநர் ஜியாங் ஜியாங்கோ மாநாட்டை தொடங்கிவைத்தார்.

இதில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

இந்திய-சீன ஊடக கூட்டமைப்பு, இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய-சீன உறவு மேலும் வலுவடைய வேண் டும். நீண்டகாலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்சி னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

இந்தியா-சீனா இடையேயான வர்த்தக, தொழில் உறவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல் இந்திய நிறுவனங்களுக்கும் சீன அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மே மாதம் மோடி சீனா பயணம்

சீனாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்னோட்டமாகவே இப்போது நான் பெய்ஜிங் வந்துள்ளேன். மோடியின் பயண தேதி விரைவில் முடிவு செய்யப்படும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். சீன பிரதமர் லீ கெகியாங்கை ஒருமுறை சந்தித்துள்ளார். மோடியின் மே மாத பெய்ஜிங் பயணத்தால் இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும்.

எனது பயணத்தின்போது கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு இரண்டாவது பாதையை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். இதன்மூலம் பஸ்ஸிலேயே பக்தர்கள் புனித யாத்திரை செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சீன அமைச்சருடன் சந்திப்பு

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று சந்தித்துப் பேசினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செப்டம்பரில் டெல்லி வந்தபோது, இந்தியாவின் புல்லட் ரயில், அதிவேக ரயில், தொழில் பூங்கா திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.2.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதுதொடர்பாக சுஷ்மா விரிவான ஆலோசனை நடத்தினார்.

இன்று முத்தரப்பு மாநாடு

பெய்ஜிங்கில் இன்று நடைபெறும் சீன, ரஷ்ய, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கள் மாநாட்டில் சுஷ்மா பங்கேற்கிறார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x