Published : 28 Feb 2015 10:10 AM
Last Updated : 28 Feb 2015 10:10 AM

பால் ராபின் க்ரக்மேன் 10

அமெரிக்க பொருளாதார நிபுணர், பேராசிரியர் பால் ராபின் க்ரக்மேன் (Paul Robin Krugman) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் அல்பனீ நகரில் (1953) பிறந்தார். புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்ஐடி) முனைவர் பட்டமும் பெற்றார்.

 ஐசக் அசிமோவின் ‘பவுண்டேஷன்’ நாவல்களைப் படித்ததால் பொருளாதாரத்தில் ஆர்வம் பிறந்தது என்கிறார். எம்ஐடி, ஸ்டான்போர்டு, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் என உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

 சர்வதேச பொருளாதாரம், பொருளாதாரப் புவியியல், சர்வதேச நிதி ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் மிக்கவர். அமெரிக்காவின் முக்கியமான பொருளாதாரச் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

 தடையற்ற வர்த்தகம், உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிப்பவர். கடந்த 2000-ல் இருந்து ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் கட்டுரை எழுதிவருகிறார். பொருளாதாரம் குறித்து 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார்.

 சிக்கலான பொருளாதாரக் கோட்பாடுகளைக்கூட அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதக்கூடியவர். வருவாய் விநியோகம், வரி விதிப்பு, சர்வதேசப் பொருளாதாரம் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து எழுதியுள்ளார்.

 பாடப் புத்தகங்கள் தவிர, அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் அதிகரித்துவந்த வருவாய் ஏற்றத் தாழ்வுகள் குறித்தும் பல புத்தகங்கள் எழுதினார்.

 தான் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை ‘தி கிரேட் அன்ரிவீலிங்’ என்ற பெயரில் தொகுத்து 2003-ல் வெளியிட்டார். 2010-ல் ‘கெட் ஹிம் டு தி கிரீக்’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார்.

 ஆடம் ஸ்மித் விருது, காலம்னிஸ்ட் ஆஃப் தி இயர் உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளை வென்றுள்ளார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. 2000-ல் இருந்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு இயல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

 புது வணிகத் தேற்றம் (New Trade Theory), புதிய பொருளாதாரப் புவியியல் (New Economic Geography) துறைகளில் இவரது பங்களிப்பை கவுரவித்து 2008-ல் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (Nobel Memorial Prize in Economic Science) வழங்கப்பட்டது.

 லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சர்வதேச பொருளாதார அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அமெரிக்க தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் 1979 முதல் இணை ஆராய்ச்சியாளராகவும் இருந்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x