Published : 29 Jan 2015 09:04 am

Updated : 29 Jan 2015 09:04 am

 

Published : 29 Jan 2015 09:04 AM
Last Updated : 29 Jan 2015 09:04 AM

மனிதாபிமான சிகிச்சைக்கு என்ன வழி?

மருத்துவமனைகளை எல்லா நோயாளிகளுக்குமான தீவிர சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்போகிறோமா?

பெங்களூரில் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தேன். அங்கிருந்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களுடைய மருத்துவத் திட்டங்களுக்கு நிதியுதவி கோருவதற்காகக் காத்திருந்தனர். மருத்துவத் துறையில் மிகவும் போற்றப்படுபவரும், ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்பவருமான ஒரு மருத்துவரின் மனுவை அந்தக் கூட்டத்தின் தலைவர், முதலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார்.

எதிர்காலத்தில் அமையவிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யு.) செவிலியர்களுக்கு மனித பொம்மைகளைக் கொண்டு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கு அவர் நிதி கோரியிருந்தார். அவருடைய மருத்துவத் திட்டம் என்ன என்று விவரித்தபோது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது: “எதிர்கால மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு மட்டுமே இருக்கும். புறநோயாளியர் சிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டுவிடும். தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற நமக்கு ஆயிரக் கணக்கில் செவிலியர்கள் தேவை. செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு நோயாளிகள் கிடைக்க மாட்டார்கள். (ஜவுளிக் கடைகளில் இருப்பதைப் போன்ற) மனித பொம்மைகளைத் தயாரித்துக்கொடுக்க நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. மிகக் குறைந்த விலையில் இதை நாம் இந்தியாவில் விற்கலாம். எதிர்கால மனிதகுலத்துக்கான இந்த மருத்துவத் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் மகிழ்ச்சியை இந்த அமைப்பு பெற விரும்புகிறேன்.”

அதிரவைக்கிறதல்லவா? இந்தப் பரிந்துரையை ‘அறிவாளிகளான’ தலைவரும் துணைத் தலைவரும் அப்படியே ஏற்று, மேற்கொண்டு விவாதித்து தாமதம் செய்யாமல், அவர் கோரியபடியே நிதியுதவியை அனுமதித்து, அவர் அங்கிருந்து விரைவாக வெளியேற உதவினர். அவர் எதை விரும்பினாரோ அது அவருக்குக் கிடைத்துவிட்டது. அந்தக் குழுவில் என்னைப் போல வேறு 3 மூத்த மருத்துவர்கள் இருந்தோம். இந்த திட்டம்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுகூட எங்களிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. நானும் இன்னொருவரும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நோயாளிகளைப் பரிசோதித்து சிகிச்சை அளிப்பதிலும், மாணவர்களுக்கு மருத்துவப் பாடங்களைக் கற்றுத்தருவதிலும் கழித்தவர்கள். பரபரப்பாக வந்து தன்னுடைய திட்டத்துக்கு நிதி பெற்றுச்சென்ற மருத்துவர் என்னிடம் படித்தவர்தான். அந்தக் குழுவில் மூன்றாவதாக இருந்தவரும் (ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) என்னுடைய முன்னாள் மாணவர்தான்!

அமெரிக்க நோயாளி சொன்னது சரி

அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஏதோவொரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அது என்ன என்று அறிய கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட சோதனைகள், பரிந்துரைகள், கேள்விகள். “இது எதனால் ஏற்படுகிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத நோய்” என்று மருத்துவர்கள் அவரிடம் கூறினார்கள். கடைசியில் ஒரு நல்ல மருத்துவர் அவரை நிதானமாகப் பரிசோதனை செய்துவிட்டு, ‘இது ஒருவித ஒட்டுண்ணியால் ஏற்படுவது’ என்று கண்டுபிடித்தார்.

இந்த மோசமான அனுபவத்துக்குப் பிறகு, அந்த இளம் பெண் இன்றைய மருத்துவமுறை குறித்துப் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறார். “நவீன மருத்துவம் தொழில்நுட்பரீதியாக முன்னேறியிருக்கிறது, மனிதாபி மானரீதியாக வற்றிப்போய்விட்டது. எந்த முடிவையும் நிலையாக அறுதியிட்டுக்கூட கூற முடியாமல், மாற்றிக்கொண்டே இருக்கிறது. உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் சிகிச்சை தருவதற்கு ஏற்றதாக இருக் கிறது, நீண்ட நாட்களாகத் தொடரும் பிரச்சினை என்றால், எதனால் என்றுகூடக் கண்டுபிடிக்கும் திறனை இழந்துவிட்டது. ‘நோயாளியை மையமாகக் கொண்ட கவனிப்பு’ என்ற கொள்கையே மாறி, நோயாளியின் தேவைக்கு மாறாகப் போகும் நிலைகூட ஏற்பட்டுவிடுகிறது” என்று எழுதியிருக்கிறார்.

சரியான அடித்தளம் இல்லை

இப்போதைய நவீன மேற்கத்திய மருத்துவமுறைக்குச் சரியான அடித்தளம் இல்லை. அடுத்த பத்தாண்டுகளில் எல்லா நோயாளிகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத்தான் போவார்கள் என்பது மிகவும் ஆபத்தான கருத்து. தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் போய் மகிழ்ச்சியோடு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. பெரும்பாலான நோயாளிகள் ‘தங்களைப் படைத்தவரை’, தீவிர சிகிச்சைப் பிரிவு வழியாகப் போய்த்தான் சந்திக்கிறார்கள். மரணத்துக்கே உரிய மரியாதைகூட அங்கு போய்விடுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளியின் நெருங்கிய உறவினர்களைக்கூட அனுமதிப்பதில்லை. ‘அவருடைய கடைசி நாளில் கூட இருக்க முடியாமல் போய்விட்டதே’ என்று எத்தனையோ பேர் மனம் புழுங்குகிறார்கள்.

மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சிலருக்குத் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு. ஒரு நாளைக்கு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளில் 2% முதல் 5% வரைதான் அங்கு சேர்க்கப்பட வேண்டும். நம்முடைய மருத்துவமனைகளை எல்லா நோயாளிகளுக்குமான தீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்போகிறோமா? பணம் சம்பாதிக்க நல்ல வியாபார உத்தியாக இருக்கலாம், நோயாளியைக் குணப்படுத்தும்விதத்தில் அது மிகவும் மோசமானதாக இருக்கும்.

தீவிர சிகிச்சைப் பிரிவுகள் எப்படி?

இது அப்படியே இருக்கட்டும், நம்முடைய தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் (ஐ.சி.யு.) திருப்திகரமான சேவையை அளிப்பதில்லை என்பதே உண்மை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகள் இறப்பதற் கான காரணங்களில் ஒன்று, மருத்துவமனைகள் மூலம் ஏற்படும் நோய்தான். அதைப் பரப்பும் கிருமிகளுக்கு ஐ.சி.யு. உற்ற களமாகத் திகழ்கிறது. இன்னொரு காரணம், நோயாளியின் இயற்கையான நோய் எதிர்ப்புத்திறன் மங்கிப்போவது. இதற்கும் காரணம், நோயாளி வாய்வழியாகச் சாப்பிடுவதைக் குறைத்து, நரம்புகள் வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகளும் ஊசிகளும் குளூகோஸ் உள்ளிட்டவையும் ஏற்றப்படுவதுதான். நோய் எதிர்ப்பு மருந்துகள் நரம்பு வழியாக ஏற்றப் படுவதால், உடல் இயல்பாக அந்த சக்தியை உருவாக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறது. வாயிலிருந்து தொடங்கும் உணவுப்பாதை, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது செயலிழப்பதால் உடலுக்குள் எல்லாம் ஒடுங்குகிறது. தத்துவார்த்தமாகச் சொல்வதானால், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிக்குக் கெடுதலானவற்றைத்தான் அதிகம் செய்கிறோம்.

“அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு நாள் முழுக்க இருந்து பாருங்கள். இரண்டு விஷயங்கள் உங்கள் கண்ணுக்குப் பளிச்சென்று படும். அமைப்புரீதியாக அங்கு குழப்பமே நிலவுவதைப் பார்க்கலாம். அடுத்தது டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இதர மருத்துவ சார்நிலைப் பணியாளர்கள் என்று அனைவருமே கட்டிலில் படுத்திருப்பது ஒரு மனிதர், அவருக்குரிய மரியாதையுடன் கவனிக்க வேண்டும் என்பதே இல்லாமல், அறைக்குள் அடிக்கடி எதற்கோ வருவதும் பிறகு எதற்கோ வெளியேறுவதுமாகவே இருப்பார்கள். நோயாளியைக் கவனிப்பது, மருந்து - மாத்திரை தருவது, ஊசி போடுவதெல்லாம் இயந்திர கதியில் நிறைவேற்றப்படும்” என்று அந்த இளம் அமெரிக்கப் பெண் எழுதியிருக்கிறார்.

உள்ளிருந்து வரும் குரல்கள்

இப்போது மருத்துவத் துறையிலிருந்தே இந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மனசாட்சியுள்ள பல மருத்துவர்கள் இந்த நிலை மாற வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். 45 ஆண்டு களாக நானும் இந்தப் போக்கை எதிர்த்துக் கரடியாகக் கத்திக்கொண்டிருக்கிறேன். யாரும் கவனிப்பதே இல்லை. மாறாக, அவர்கள் பணம் சம்பாதிப்பது பிடிக்காமல் நான் இப்படிக் குரல் எழுப்புகிறேன் என்றே பலரும் தவறாக நினைக்கிறார்கள். நோயாளியைக் குணப்படுத்துவதென்பது வியாபாரம் அல்ல, அது துயரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு உயிரைக் காப்பாற்ற இயற்கை நமக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பு என்பதே என் கருத்து.

மருத்துவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். மனித குலத்துக்குச் சிகிச்சை தந்து நோயாளிகளை வேதனை யிலிருந்து மீட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சமூகத்துக்கான தங்களுடைய கடமையை ஆற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள். பணம் தானாக வரும், எந்த மருத்துவரும் வருமானம் இல்லாமல் பட்டினி கிடந்ததாக வரலாறு இல்லை.

- பி.எம். ஹெக்டே, மூத்த மருத்துவர், தொடர்புக்கு: hegdebm@gmail.com

|தமிழில்: சாரி|

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நவீன மருத்துவம்தீவிர சிகிச்சை பிரிவுமருத்துவமனை வட்டாரம்மருத்துவமனைநோயாளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author