Published : 04 Jan 2015 13:03 pm

Updated : 04 Jan 2015 13:03 pm

 

Published : 04 Jan 2015 01:03 PM
Last Updated : 04 Jan 2015 01:03 PM

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 4

4

சிங்கப்பூர் ரொம்பச் சின்ன பகுதி. தயாரிப்பு என்று அங்கே எதுவும் கிடையாது. தண்ணீரைக்கூட மலேசியப் பகுதியிலிருந்துதான் பெற வேண்டும் என்கிற அளவுக்கு ஏதுமற்ற பகுதி அது. என்றாலும் பொருளாதாரத்தில் குதிரைப் பாய்ச்சலுடன் முன்னேறிக் கொண்டு இருந்தது. மலேசி யாவின் அதிகார கேந்திரம் கோலா லம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு இடம் மாறிவிடுமோ என்ற அச்சம் கூட மலேசியாவின் அதிகாரவர்க் கத்துக்கு ஏற்பட்டு இருந்தது.

பிரதமர் தும்கு அப்துல் ரஹ்மான், ‘சிங்கப்பூர் பிரிந்து விடட்டும்’ என்று நாடாளுமன்றத் துக்கு ஆலோசனை கூறினார். ஆனால் சேர்ந்து இருக்கவே விரும்புவதாக சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார்.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 126-0 என்கிற கணக்கில் சிங்கப்பூர் பிரிந்துச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதரவு ஓட்டுகள் விழுந்தன. (சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை).

கண்ணீர் வழிய, ‘சிங்கப்பூர் தனி நாடாகி விட்டது’ என்று அறிவித்த லீ குவான் யூ அதன் பிரதமர் ஆனார்.

பின்னர் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ‘’அது என் மனதுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த தருணம். என் வாழ்க்கை முழுவதும் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இருதரப்பிலும் உள்ள மக்கள் புவியியலால், பொருளாதாரத்தால், ரத்த உறவால் ஒன்றுபட்டவர்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரிவு நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டமானது’’ என்றார்.

ஆக மலேசியாவில் இணைந்த இரண்டே வருடங்களில் சிங்கப்பூர் பிரிந்து தனி நாடானது.

சில வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு மீண்டும் பேட்டியளித்த லீ குவான் யூ ‘மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததில் எனக்கு மிகவும் வருத்தம். தும்கு அப்துல் ரஹ்மான் (மலேசிய அதிபர்) மட்டும் சிங்கப்பூரை விலக்காமல் இருந்திருந்தால் மேலும் பல முன்னேற்றங்கள் நடைபெற்றிருக்கும். சிங்கப்பூரில் செய்யப்பட்ட பல சாதனைகள் மலேசியாவிலும் நடந்திருக்கும். இன வேறுபாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தோடு பல்வேறு இனங்களும் நடந்து கொண்டி ருப்பது சாத்தியம்தான். இப்போது மலேசியா தனித்தனியாக பிரிந்து செயல்படுவதைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள் ஆகியோர் தனித் தனிப் பள்ளிகளில் தங்கள் குழந்தை களைச் சேர்ப்பதும், தனித்தனி குடியிருப்புகளில் வசிப்பதும், ஒருவரோடு ஒருவர் கலந்து பழகாமல் இருப்பதும், அண்டை வீட்டுக்காரர்கள் என்ற வகையில் எனக்கு துக்கத்தைத் தருகிறது’’ என்றார்.

சுதந்திரமடைந்ததும் தங்க ளுக்கு உலக நாடுகளின் அங்கீகாரம் உடனடியாகத் தேவை என்பதை உணர்ந்தது சிங்கப்பூர். ஒரு வேளை இந்தோனேசிய ராணுவம் தங்களைத் தாக்கினால்? மலேசியாவில் ஒரு பிரிவினர் சிங்கப்பூர் பிரியக் கூடாது என்று கொடி பிடித்துக்கொண்டிருந்தனர். ஒருவேளை சிங்கப்பூருக்கு மிகவும் பாதகமான நிபந்தனைகளுடன் மீண்டும் மலேசியா அதைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டால்? பதற்றத்துடன் 1965 செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் உறுப்பினர் ஆனது சிங்கப்பூர். இதற்கு உதவின மலேசிய, இந்திய, சீன அரசுகள்.பிரிவினைக் குப் பிறகும் மலேசியாவும் சிங்கப்பூரும் நட்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் உரசல்கள் இல்லாமல் இல்லை.

இயற்கை வளங்கள் இல்லாத நாடு சிங்கப்பூர். சொல்லப்போனால் போதிய அளவு நிலம் கூடக் கிடையாத தீவு நாடு. எல்லாவற்றுக்கும் (குடிநீர் உட்பட) பிற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் என்பதால் விலைவாசி பொதுவாக அங்கு அதிகமாகவே இருக்கிறது.

சிங்கப்பூரைவிட மலேசியாவில் பெட்ரோலின் விலை குறைவு. பெட்ரோல் மட்டுமல்ல வேறு பல பொருட்களின் விலையும்கூட குறைவுதான். எனவே சிங்கப்பூரில் வசிப்பவர்களில் பலரும் விடுமுறை நாட்களில் மலேசியா சென்று ஷாப்பிங் செய்துவிட்டு அப்படியே தங்கள் காரின் பெட்ரோல் டாங்கை நிரப்பிக் கொண்டு வருவது வழக்கமானது. சராசரியாக இப்படி ஒரு நாளைக்கு மலேசியா சென்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்றானது.

மலேசிய அரசு இதை விரும்பவில்லை. ‘‘மலேசிய எல்லையிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எந்த பெட்ரோல் பங்க்கிலும் வெளிநாட்டுக் கார்கள் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளக் கூடாது’’ என்று அறிவித்து விட்டது. (வெளிநாடு என்று அறிவித்தாலும் முக்கிய இலக்கு சிங்கப்பூர்தான்).

‘‘எங்கள் மக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தில்தான் பெட் ரோலுக்கு மானியம் கொடுத்து குறைந்த விலையில் விற்கிறோம். இதை எப்படி பிற நாட்டு மக்களுக்கு அளிக்க முடியும்?’’ என்பது மலேசிய நியாயம். இந்த அறிவிப்பு வந்தவுடன் வேறு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

மலேசிய எல்லைப் பகுதிக்குள் சிங்கப்பூர் பதிவு எண்ணைத் தாங்கிய ஒரு கார் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டால் என்ன செய்வது? மலேசியா இதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வெளிநாட்டினருக்கென்று தனி பெட்ரோல் ஸ்டேஷன்கள். இவற்றில் பெட்ரோலின் விலை சந்தை விலையாகத்தான் இருக்கும். (அதாவது மானியம் கிடையாது). இரு சக்கர வாகனங்கள் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் தாராளம் காட்டியது மலேசியா. புதிய விதி இரு சக்கர வாகனங்களுக்குச் செல்லாது என்றது. ‘‘நாங்கள் எளியவர்களின் தோழன்’’ என்றது.

சிங்கப்பூர் தனி நாடாக ஓர் இனக் கலவரமும் முக்கிய காரணமாக அமைந்தது என்றோம். தனி நாடாக ஆனபிறகு அங்கு இனக் கலவரங்கள் நடைபெறவில்லையா?

(இன்னும் வரும்)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஜி.எஸ்.எஸ்தொடர்வரலாற்று தொடர்ஜிஎஸ்எஸ் தொடர்சிங்கப்பூர் வரலாறுஉலக அரசியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author